ஏழுதமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கருத்து

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வநதபோது தமிழக அரசு தரப்பில், ஏழுபேர் விடுதலை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதன் மீது முடிவெடுக்கப்படாமல் உள்ளது. மேலும் ஆளுநருக்கு அரசு அழுத்தம் கொடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆளுநரும் ஒரு அரசின் பிரதிநிதிதானே, அவரிடம் அரசு தான் கேட்க வேண்டும். விடுதலை தொடர்பான தீர்மானம் போட்டு அனுப்பியது தொடர்பாக ஆளுநரிடம் கேட்க வேண்டியது நாங்களல்ல.

விடுதலை செய்வது என்ற தீர்மானம் தொடர்பான கோப்புகள் குறித்து அரசு தான் கேட்க வேண்டும், எனவே தீர்மானம் மீதான முடிவு என்ன, அதன் நிலை என்ன என்பது தொடர்பாக ஆளுநரிடம் கேட்டு 2 வார்த்தில் தெரிவியுங்கள்?. என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முகநூலில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு:

“பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்குத் தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டு, இரு வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்யுமாறு” அதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

அமைச்சரவை தீர்மானம் மற்றும், மாநில உரிமை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்த அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் “குட்டு” வைத்துள்ளது. எனவே இனியாவது உடனடியாக அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுங்கள் என்று ஆளுநரை வலியுறுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Response