அனுமான் ஆசீர்வாதத்தால் வெற்றி – கெஜ்ரிவால் உற்சாகம்

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரசு ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது. இதில் 62.59 சதவிகித வாக்குகள் பதிவானது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி கண்ட நிலையில் தற்போது அக்கட்சி 63 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. பாஜக கடந்த தேர்தலில் வெறும் 3 இடங்களையே கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரசு எந்தவொரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜரிவால் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது….

டெல்லி மக்களுக்கு பகவான் அனுமான் ஆசீர்வாதம் அளித்த தினம் இன்று. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய அனுமான் ஜி எங்களுக்கு சரியான பாதையைக் காட்ட வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

புதிய அரசியலுக்கான இடத்தை மக்கள் உருவாக்கி உள்ளனர். இது எனது வெற்றி அல்ல, ஒவ்வொரு டெல்லிவாசிக்கும் கிடைத்த வெற்றி. டெல்லி மக்கள் சிறந்த வாய்ப்பை வழங்கி உள்ளனர். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்று உள்ளோம்.

டெல்லி மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது. தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம். நாட்டில் புதிய வகையான அரசியல் பிறப்பதற்கு டெல்லி தேர்தல் முடிவுகள் அடித்தளமாக அமைந்துள்ளன. நாட்டின் முன்னேற்றத்திற்கான அரசியலை மக்கள் அங்கீகரித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response