ரஜினிக்கெதிரான போராட்டங்கள் தொடரும் – திவிக அறிவிப்பால் பரபரப்பு

தந்தை பெரியார் குறித்து தவறான செய்திகளைப் பேசிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கொளத்தூர்மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை வைத்தது. அதை ஏற்காத ரஜினியைக் கண்டித்து வீடு முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 11 மணி அளவில், ரஜினியே மதவாத அரசியலுக்குத் துணைபோகாதே,ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி ரஜனிகாந்த்தே மன்னிப்புக் கேள்,ரஜினியே பார்ப்பனர்களை சந்தோஷப்படுத்த பெரியாரைச் சீண்டாதே, துக்ளக் படித்தால் முட்டாளாகத் தான் இருக்க முடியும்,ரஜினியே வரலாறு தெரியாமல் உளறாதே உள்ளிட்ட பதாகைகளை வைத்து கொண்டு ரஜினிகாந்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி ஏராளமானோர் திரண்டனர்.
இதில், பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள், போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட பேரணியாகச் சென்றனர். உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தேனாம்பேட்டை காவல்துறையினர் அனைவரையும் செம்மொழி பூங்கா அருகே வழிமறித்து தடுத்து கைது செய்தனர். பின்னர் அனைவரையும் சமூக நலக்கூடங்களில் அடைத்து வைத்தனர்.

அப்போது, திராவிட விடுதலைக் கழக தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது….

தமிழகம் முழுவதும் ரஜினிகாந்த் மீது புகார் அளித்தோம். காவல்துறையினரின் மெத்தனப்போக்கால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.ரஜினி, பெரியாரை
இனி சீண்டினால் தமிழகத்தில் அவருடைய ஒரு படம் கூட ஒடாது.

பெரியாரைப் பற்றி அவதூறாகப் பேசிவிட்டு, நேற்று ரஜினி ஆதாரத்தைக் காட்டுகிறேன் என்று யாரோ எழுதிய
கட்டுரையைக் காட்டுகிறார். உண்மையான மனிதன் என்றால் அன்று வந்த துக்ளக் பத்திரிகையை எடுத்து காட்டி இருக்கவேண்டும்.

இது முதல்கட்ட முற்றுகைப் போராட்டம் தான்.ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும்.

இனி, ரஜினிகாந்த் திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளிலும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம்

இவ்வாறு அவர் கூறினார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் இந்த அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response