கசிந்த இரகசியம் – அமித்ஷா பதவிக்கு ஆபத்து

கர்நாடக மாநிலத்தில் காங்கிரசுக் கட்சி ஆதரவுடன் மஜத கூட்டணி ஆட்சி குமாரசாமி தலைமையில் நடந்தது. அப்போது பாஜவின் ‘ஆபரேசன் தாமரை’ என்ற ரகசிய நடவடிக்கையில் சிக்கிக்கொண்ட காங்கிரசு மற்றும் மஜத.வைச் சேர்ந்த 17 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினர்.

இவர்கள் அனைவரையும் மும்பை ரிசார்ட்டில் தங்கவைத்து, பாஜவினர் பாதுகாத்தனர். இதனால் பெரும்பான்மையை இழந்த குமாரசாமி ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து கவிழ்ந்தது.

கூட்டணி ஆட்சி கவிழக் காரணமான 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இவர்கள் 2023 ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் 17 தொகுதிகள் காலியாக இருப்பதாக அரசாணை வெளியிடப்பட்டது. இதில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலில் பாஜ ஆட்சி அமைய தங்களது பதவியை தியாகம் செய்த 17 பேருக்கும் போட்டியிடும் வாய்ப்பு வழங்க பாஜ முடிவு செய்துள்ளது.

ஆனால், பாஜவின் இந்த முடிவுக்கு அக்கட்சியினர் இடையே பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே, பாஜ நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் முதல்வர் எடியூரப்பா ஈடுபட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் பெங்களூரு பாஜ அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மற்றும் வேட்பாளர் தேர்வுக் கூட்டம் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா பேசுகையில், ‘‘கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அகற்றப்பட்டு மீண்டும் பாஜ ஆட்சி அமைய 17 பேர் தங்கள் பதவியை தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்தை மறந்து குற்றவுணர்வுக்கு ஆளாக நான் விரும்பவில்லை.

எனது முயற்சியாலும், பாஜ தேசிய தலைவர் அமித்ஷா வழிகாட்டுதல் படியும் காங்கிரஸ்-மஜதவை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

மும்பை ரிசார்ட்டில் இவர்கள் தங்கியிருந்தபோது அமித்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் இவர்கள் பாதுகாக்கப்பட்டனர். எனவே இடைத்தேர்தலில் அவர்களுக்கு சீட் வழங்க வசதியாக பாஜ நிர்வாகிகள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

பாஜ வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா பேசிய இந்த ஆடியோ ‘லீக்’ ஆகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்த காங்கிரசு தலைவர்கள், கூட்டணி ஆட்சியைக் குறுக்கு வழியில் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்த எடியூரப்பா மற்றும் அமித்ஷாவுக்கு கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

மேலும், மாநில காங்கிரசு தலைவர் தினேஷ்குண்டுராவ், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, செயல் தலைவர் ஈஸ்வர் கண்ட்ரே உள்ளிட்டோர் நேற்று ராஜ்பவன் சென்று ஆளுநர் வி.ஆர்.வாலாவை சந்தித்தனர். அப்போது, மாநில அரசை கலைக்கும்படி பரிந்துரை செய்யவேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆளுநரைச் சந்தித்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது…

காங்கிரசு, மஜத கூட்டணி அரசைக் கவிழ்த்தது தாங்கள் தான் என்பதை முதல்வர் எடியூரப்பா ஒப்புக்கொண்டு விட்டார். அது மட்டும் இன்றி இதற்குக் காரணம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்பதையும் அவரே கூறியுள்ளார்.

இதற்கு அவர் பேசிய ஆடியோவே சாட்சியாக உள்ளது. கூட்டணி அரசை தான் மட்டும் அல்ல, அமித்ஷாவும் சேர்ந்தே கலைத்தோம் என ஒப்புக்கொண்ட பிறகு முதல்வர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை எடியூரப்பா இழந்துவிட்டார்.

17 எம்எல்ஏக்கள் மும்பையில் 2 மாதம் தங்கியிருந்தபோது அமித்ஷாவே நேரடியாக அவர்களைக் கண்காணித்தார் என்கிற தகவலும் இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. முதல்வர் எடியூரப்பாவின் பேச்சு அடங்கிய ஆடியோவை கவர்னர் வி.ஆர்.வாலாவிடம் ஆதாரத்துடன் அளித்துள்ளோம்.

ஜனநாயகம் எப்படி படுகொலை செய்யப்பட்டது என்பது சாட்சியுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆட்சியைப் படுகொலை செய்த முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு மாநிலத்தில் நீடிக்கக்கூடாது என்பதால் உடனடியாக மாநில அரசைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்யும்படி ஆளுநரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்.

அது போல் மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் அமித்ஷா, அரசியல்விதிக்கு எதிராக நடந்துள்ளார். எனவே, மத்திய அமைச்சரவையில் நீடிக்கும் தகுதியை அவர் இழந்துவிட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து அமித்ஷா உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதாரத்துடன் அமித்ஷா மாட்டிக் கொண்டிருப்பதால் அவருக்கும், கர்நாடக பாஜக ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response