பண்பாட்டைக் காத்து போர்க்குணத்தையும் விடாத தமிழ்நாடு – அதிர்ந்த மோடி

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசுகின்றனர். இதையொட்டி சென்னை, மாமல்லபுரம் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 63 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் சென்னை வருவதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழிநெடுக பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜின்பிங் இன்று மதியம் 1.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வருகிறார். முன்னதாக இன்று மதியம் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னைவருகிறார்.

மோடி, கோவளத்தில் உள்ள ஓட்டலிலும், சீன அதிபர் ஜின்பிங், கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஓட்டலிலும் தங்குகின்றனர்.

இரு நாட்டு தலைவர்களும் இன்றும், நாளையும் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இந்திய – சீன எல்லை பிரச்னை, இரு நாட்டு வர்த்தம், தீவிரவாதம் ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கிறார்கள். இரண்டு நாள் சந்திப்பின்போது இரண்டு நாட்டு தலைவர்களும் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து முக்கிய அறிவிப்புகள் நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இன்று மதியம் சென்னை வரும் சீன அதிபர் விமான நிலையத்தில் இருந்து நேராக கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா விடுதிக்குச் சென்று தங்குகிறார். பின்னர் மாலை 4 மணிக்கு அங்கு இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்கிறார்.

முன்னதாக இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் சென்று கோவளம் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.

மாலை 4.55 மணிக்கு மாமல்லபுரம் வந்தடையும் சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சிற்பங்களைப் பார்வையிடுகிறார்கள்.

அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் ஆகியவைகளை பார்வையிடும் அவர்கள், தொடர்ந்து கடற்கரை கோயில் அருகில் நடைபெறும் பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளை பார்த்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இங்கு குண்டு துளைக்காத வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சீன அதிபர் சாலை மார்க்கமாக கிண்டி திரும்புகிறார்.

இதையடுத்து, 2 ஆவது நாளாக நாளை காலை 9 மணிக்கு சீன அதிபர் மீண்டும் கிண்டியில் இருந்து கோவளம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடி தங்கியுள்ள ஓட்டலில் இரு தலைவர்கள் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், பல்வேறு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுகிறார்கள்.

இதைத்தொடர்ந்து நாளை மதியம் சீன அதிபருக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். இதற்காக இரு நாட்டு உணவு வகைகளும் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை மதியம் 1 மணிக்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சீன அதிபர் ஜின்பிங் சாலைமார்க்கமாக சென்னை வந்து தனி விமானம் மூலம் நேபாளம் செல்கிறார். பிரதமர் மோடி டெல்லி செல்கிறார்.

பிரதம்ர் மோடி சென்னை தமிழகம் வந்தாலே திரும்பிப் போ மோடி எனும் குறிச்சொல்லைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம்.

இப்போது சீன அதிபரும் வருவதால் தமிழக மக்கள் என்ன செய்வார்களோ? என்கிற எதிர்பார்ர்பு எல்லோருக்கும் இருந்தது.

இந்நிலையில் அனைவரும் வியக்கும் வண்ணம், தமிழ்நாடு சீன அதிபரை வரவேற்கிறது என்று வரவேற்கும் அதே நேரம் திரும்பிப் போ மோடி யையும் அதிகாலையிலேயே டிரெண்டாக்கி விட்டார்கள்.

விருந்தினர்களை வரவேற்கும் பண்பாட்டை மறக்காமல் கடைபிடிக்கும் அதே நேரம் போர்க்குணத்தையும் கைவிடாமல் இரண்டு குறிச்சொற்களையும் பிரபலமாக்கி விட்டார்கள்.

அதிலும் இரண்டுமே ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் டிரெண்டாகியிருக்கிறது.

இதனால் பிரதமர் மோடியும் அவரது கட்சியினரும் அதிர்ச்சியடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response