ப.சிதம்பரம் போலவே கைது செய்யப்பட்ட காங்கிரசு தலைவர்

காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், பள்ளி, கல்லூரிகளில் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

சோதனையில் சிக்கிய ரூ.8.59 கோடி பணம் வருமான வரித்துறையிடம் கணக்கு காட்டாதது மட்டுமில்லாமல் முறைகேடாக பதுக்கி வைத்ததாக வருமான வரி மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக சிவகுமார் மட்டுமில்லாமல், அவரது பங்குதாரர்கள் சச்சின் நாராயண், சுனில்சர்மா, ஆஞ்சநேயா, அனுமந்தையா, ராஜேந்திரா ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

இப்புகார் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிவகுமார் உள்பட வழக்கில் உள்ளவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதற்குத் தடை விதிக்கக்கோரி சிவகுமார் உள்பட வழக்கில் உள்ளவர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 30 ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவகுமார் ஆஜரானார். அவரிடம் மாலை 6.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இணை இயக்குனர் மோனிகா சர்மா தலைமையில் நான்கு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணையை இரவு 11 மணிக்கு முடித்தனர். ஞாயிற்றுக்கிழமை ஓய்வு கொடுத்தபின் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொதுவிடுமுறை இருந்தும் 3 ஆவது நாளாக சிவகுமாரிடம் விசாரணை நடத்தினர்.

நேற்று நான்காவது நாளாக அவரிடம் விசாரணை நடத்தினர். இதுவரை 500 க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.

நேற்றைய விசாரணையின் போது மூன்று பெரிய பைகளில் ஆவணங்களை சிவகுமார் எடுத்துச் சென்று ஆஜரானார்.இந்நிலையில், விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அதிகாரிகள் நேற்று இரவு டிகே சிவகுமாரை திடீரென கைது செய்தனர்.

பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவரை இன்று டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு….

முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில், மத்தியில் உள்ள பா.ஜனதா அரசால் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு நாளும் குறிவைக்கப்படுகிறார்கள். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசின் தோல்வியை மறைக்கவும், எதிர்ப்புக் குரலைக் கட்டுப்படுத்தவும் தான் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் திசைதிருப்பப்படுகிறார்கள்.

பா.ஜனதாவின் பழிவாங்கும் அரசியலுக்கு டி.கே.சிவக்குமார் பலியாகி உள்ளார். விரைவில் அவர் நிரபராதியாக வெளியே வருவார். அந்த சமயத்தில் மத்திய பா.ஜனதாவின் வெளிப்படையான முகம் தெரியவரும். இந்த இடர்பாடான நேரத்தில் நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவு அளிப்போம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், பண்டிகைக்குக் கூட அனுமதிக்காமல் தொடர் விசாரணை நடந்த நிலையில் டி.கே.சிவக்குமார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி அமலாக்கத்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். மத்திய அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்குகிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

கர்நாடக காங்கிரசு மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பிறகு அரசியல் பழிதீர்க்கும் நடவடிக்கையாக டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டு உள்ளார். குதிரை பேரத்தை எதிர்த்த டி.கே.சிவக்குமாருக்கு எதிராக பா.ஜனதா சில்லரைத் தனமான அரசியல் செய்வதோடு, மத்தியில் பாசிச அரசு இருப்பதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Response