சிங்கள இராணுவத் தளபதியாக இருந்த மகேஷ் சேனாநாயக் ஓய்வு பெற்றதையடுத்து புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார்.
2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரின்போது இராணுவத்தின் 58 ஆவது பிரிவுக்குத் தலைமை தாங்கிய சவேந்திர சில்வா பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இலங்கை போரின்போது மனித உரிமை மீறப்பட்டதாக 2013 ஆம் ஆண்டு ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சவேந்திர சில்வாவின் பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், சவேந்திர சில்வாவுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் நம்பகமானவை என சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நியமனம் தொடர்பாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்….
ஐ.நா. மனித உரிமை ஆணையரால் போர்க்குற்றச்சாட்டுக்குள்ளான சாவேந்திர சில்வா என்பவர் இலங்கைப் படையின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
2009 ஆம் ஆண்டு போரின்போது இவர் தலைமையில் இயங்கிய
சிங்கள இராணுவத்தின் 58 ஆவது பிரிவு கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது.
விடுதலைப்புலிகளின் தளபதிகளான நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில்.வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய முன்வந்த ஆயிரக்கணக்கான மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற ஒருவரை இலங்கைப் படையின் தலைமை தளபதியாக இலங்கை குடியரசுத் தலைவர் சிறீ சேனா நியமித்திருப்பது ஆழமான உள்நோக்கம் கொண்டதாகும்.
ஈழத் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை
சிங்கள அரசு தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது என்பது
இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணையர் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன்.
அத்துடன் நின்றுவிடாமல் சில்வா மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டுமென அவரை வேண்டிக்கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.