விடிய விடிய தேடல் -ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிர முயற்சி

2007 ஆம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அதில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தரப்பில் விசாரணைகளுக்கு ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என வாதிட்டனர். இதனையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்பிணை மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் பிணை மறுக்கப்பட்ட நிலையில், சி.பி,ஐ அதிகாரிகள் டெல்லியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்திற்கு விரைந்தனர். ஆனால் வீட்டில் ப.சிதம்பரம் இல்லாததால் சிபிஐ அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

அதன் தொடர்ச்சியாக மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகளும் ப.சிதம்பரம் வீட்டிற்குச் சென்றனர். அங்கு ப. சிதம்பரம் இல்லாததால் சிறிது நேரம் காத்திருப்புக்குப் பின் புறப்பட்டனர்.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிணை மறுப்பைத் தொடர்ந்து, ப.சிதம்பரம் தரப்பு மூத்த வழக்குரைஞர் கபில்சிபல் நேற்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில், டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்கக் கோரியதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஏற்க மறுத்தார். இந்த மனு இன்று (புதன்கிழமை) காலை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்திற்குச் சென்று வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். அந்த நோட்டீஸில் இரண்டு மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக ப.சிதம்பரத்திற்குக் கெடு விதிக்கப்பட்டது.

மேலும் இந்த நோட்டீசை சிபிஐ ப.சிதம்பரத்தின் மின்னஞ்சலுக்கும் அனுப்பியுள்ளது. இதனால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் கைது நடவடிக்கைக்குத் தடை ஏற்படலாம் என்கிற அச்சத்தில் விடிவதற்குள் அவரை கைது செய்ய அரசு தீவிரம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது.

ஏன் இவ்வளவு அவசரம்?

Leave a Response