இந்திய மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் – ராஜ்நாத்சிங்குக்கு பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதல் நினைவு நாள் நேற்று (ஆகஸ்ட் 16) கடைப்பிடிக்கப்பட்டது.

அவர் பிரதமராக இருந்தபோது 1998 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தினார்.

அந்த இடத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சென்று பார்வையிட்டு, வாஜ்பாய்க்கு நினைவஞ்சலி செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து அவர் ட்விட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.
அந்தப் பதிவில் அவர்,இந்தியாவை அணு ஆயுத வல்லமை படைத்த நாடாக மாற்றுவதில் வாஜ்பாய் உறுதியாக இருந்தார். அதற்கு இந்த பொக்ரான் சாட்சியாக அமைந்துள்ளது. எதிரிநாடு அணுகுண்டை கையில் எடுக்காத வரையில், இந்தியாவும் முதலில் அணுகுண்டை கையில் எடுக்காது என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இதை உறுதியுடன் இந்தியா கடைப்பிடித்தும் வருகிறது. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பது சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும் எனக் கூறி உள்ளார்.

ராஜ்நாத்சிங்கின் இந்தக்கருத்துக்கு எதிர்ப்பு வந்திருக்கிறது.

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

இந்திய நாட்டின் மீது அணுகுண்டுகளால் தாக்குதல் நடக்காதவரை முதலில் அணுகுண்டுகளை பயன்படுத்த மாட்டோம் என்கிற இந்தியாவின் நிலைப்பாடு எதிர்காலத்தில் மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அணுகுண்டு சோதனை செய்யப்படும் “பொக்ரானிலிருந்து” இதை அறிவித்திருப்பது இந்திய மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம். இதைவிட உலகத்திற்கு எதிரான ஒரு அறிக்கை இருக்காது, அதுவும் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் மிகவும் மோசமாக உள்ள காலகட்டத்தில் இப்படியான அறிக்கைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

ஏற்கனவே இருந்த “முதலில் பயன்படுத்த மாட்டோம்” என்கிற கொள்கை சரியாக இருந்ததா? இல்லை, என்பதுதான் பதில். அந்நிய நிலப்பரப்பில் இந்திய ராணுவம் ஆக்கிரமித்து முன்னேறும் போது அதைத் தடுக்கும் வகையில் எதிரி நாடு “தந்திரோபாய” (tactical) அணுகுண்டுகளை பயன்படுத்தப்படுத்தினால், இந்தியாவிற்கு அணுகுண்டுகளை பயன்படுத்தும் உரிமை கிடைத்துவிடுகிறது. மற்றொரு நாடு இந்திய நிலப்பரப்பின் மீது அணு குண்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தும்வரை இந்தியா காத்திருக்க வேண்டியதில்லை

காந்தியின் தேசம் உலகத்திற்கு கொடுத்த பேராயுதம் “அஹிம்சை”,அதுவும் அஹிம்சா வழிப்போராட்டங்களின் வாயிலாக பெறப்பட்ட இந்தியாவின் 73 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்கள் நடைபெறும் சமயத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது.

மிகவும் பதட்டமான காலகட்டத்தில் பொறுப்பாக செயல்படவேண்டிய அமைச்சர் இப்படி தெரிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response