முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்தகனம் இன்று

1996 ஆம் ஆண்டு மே மதாம் 13 நாட்கள், 1998 ஆம் ஆண்டு பதவியேற்று 13 மாதங்கள், 1999-2004 வரை ஐந்தாண்டுகள் என மூன்று முறை இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்துள்ள 93 வயதான வாஜ்பாய், முதுமை மற்றும் உடல் நலக் குறைவின் காரணமாக, டெல்லி கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி அங்குள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

அதன்பிறகு, வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிர் காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் நேற்று முன்தினம் இரவு எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, வாஜ்பாய் நேற்று மாலை (ஆகஸ்ட் 16,2018) மரணம் அடைந்தார்.

இதுபற்றி எய்ம்ஸ் வெளியிடப்பட்ட அறிக்கையில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மாலை 5.05 மணிக்கு மரணம் அடைந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டு உள்ளது. தீவிர சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும், அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என்றும், அவரது மறைவால் நாடு அடைந்துள்ள துயரத்தில் தாங்களும் பங்குகொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வாஜ்பாயின் உடல் நேற்று இரவு, கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இரவு 9.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

வாஜ்பாய் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் அவரது உடலுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்பிறகு உடல் அங்கிருந்து, டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

அங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், மதியம் 1 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. வாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்கிருந்து ஊர்வலமாக காந்தி சமாதி மற்றும் இந்திரா காந்தி சமாதி அருகே உள்ள ‘ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல்’ என்ற இடத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு மாலை 4 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது.

Leave a Response