கேரளாவில் பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் 14 மாவட்டங்களும் தொடர்ந்து வெள்ளத்தில் மிதக்கின்றன.
அத்துடன் மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டு உள்ளதால் வரலாறு காணாத பேரழிவை மாநிலம் சந்தித்து வருகிறது.
முல்லைப்பெரியாறு, இடுக்கி, இடமலையார் அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் கரையோர மக்களை பேரழிவுக்குத் தள்ளி இருக்கிறது.
சாலைகள் அனைத்தும் நீரோட்டமாக மாறியிருப்பதால், அங்கு பாதை எது? ஆறு எது? என வேறுபாடு காணமுடியாத அளவுக்கு முற்றிலும் வெள்ளக்காடாகி வருகிறது. இதனால் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதைப்போல தண்டவாளங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. எனவே மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்வண்டிப் போக்குவரத்தை தெற்கு ரெயில்வே இரத்து செய்துள்ளது. மேலும் கொச்சி மெட்ரோ ரெயில் போக்குவரத்தும் நேற்று பலமுறை நிறுத்தி வைக்கப்பட்டது.
மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் 2-வது மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், வீட்டுக் கூரைகளிலும் தஞ்சமடைந்து உதவிக்காகக் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
சிலர் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உச்சிக்குச் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.அவர்களைப் படகுகள் மூலம் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்காக முப்படை வீரர்களுடன் தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினரும் முழுவீச்சில் களத்தில் இறங்கி உள்ளனர்.
இவ்வாறு மீட்கப்படும் மக்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக 1,067 முகாம்கள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டு உள்ளன. இதில் சுமார் 2 இலட்சம் பேர் தஞ்சமடைந்து இருக்கின்றனர்.
மழையும், வெள்ளமும் ஒருபுறம் இருக்க, ஆங்காங்கே ஏற்படும் நிலச்சரிவும் மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி வருகிறது.
பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிர்ப்பலி வாங்கி இருக்கிறது. கேரளாவின் தற்போதைய இயற்கைப் பேரிடருக்கு பலியானோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.
மழை வெள்ளப்பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் தொடர்ந்து அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஆறுகளின் கரையோரம் வசித்து வருவோர் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
இப்பேரழிவிலிருந்து கேரளாவை மீட்க பல்வேறு மாநிலங்களிலிருந்தும் உதவிகள் கிடைத்துவருகின்றன.