ஈரோடு மாவட்ட காவிரிக் கரையெங்கும் வெள்ளம்

ஈரோடு மாவட்டம், பவானி நகரப்பகுதியில் காவிரி ஆறும், பவானி ஆறும் செல்கிறது. பவானி ஆற்றில் 75 ஆயிரம் கன அடியும், காவிரி ஆற்றில் 1 லட்சத்து 65 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டு உள்ளது.

இதனால் காவிரி மற்றும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானியில் புதிய பேருந்து நிலையப் பகுதி, காவிரி வீதி, தேர்வீதி, பழையபாலம் ஆகிய பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

காவிரி ஆறு மற்றும் பவானி ஆறு கூடும் இடத்தில் பவானி கூடுதுறை உள்ளது. இந்த கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. பவானி மற்றும் காவிரி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக சங்கமேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்து சென்றது. கோவிலின் படித்துறைகளை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது.

அதேபோல, கொடுமுடி காவிரி ஆற்றங்கரையோரம் இலுப்பைத்தோப்பு, ஊஞ்சலூர் அருகே சத்திரப்பட்டி ஆகிய பகுதியில் உள்ள 92 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் கொடுமுடி மகுடேசுவரர் கோவில் படித்துறையை மூழ்கடித்தபடி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் மொடக்குறிச்சி அருகே நஞ்சைகோபி நட்டாற்றீசுவரர் கோவிலை சூழ்ந்தபடி காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அங்கு கரையோரங்களில் உள்ள 15 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. உடனே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியது. இதன்காரணமான நேற்று முன்தினம் பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. நேற்று இரவு 7 மணி அளவில் பவானி ஆற்றில் 75 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகரித்து திறக்கப்பட்டது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததுடன் அணையின் நீர்மட்டம் 102.09 அடியாக உயர்ந்தது.

இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக பவானிசாகர் அருகே உள்ள அரியப்பம்பாளையம், தொட்டம்பாளையம், பழையூர் பகுதியில் உள்ள 350-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

இந்த வெள்ளப்பெருக்கால் சத்தியமங்கலம் பாலம் அருகே உள்ள பவானீஸ்வரரின் கோவில் சுற்றுச்சுவரின் ஒருபகுதி இடிந்துவிழுந்து விட்டது. அப்போது கோவிலில் பக்தர்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

இதேபோல் கோபி அருகே உள்ள கொடிவேரி அணை மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது. இதனால் நேற்று 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் அணையை சுற்றிப்பார்க்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆற்றின் கரையோரங்களில் நின்று மீன்கள் பிடிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Leave a Response