காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் எப்படி வியாபாரமாக்கப்பட்டது? என்பதை சான்றுடன் விளக்குகிறது மக்கள் செய்தி மையம் வெளியிட்டுள்ள இச்செய்தி….
வியாபார கடவுளாக்கப்பட்ட அத்திவரதர்
டோனர் பாஸ் – ரூ3000/- – வி.ஐ.பி பாஸ் –
ரூ4500/- வி.வி.ஐ.பி பாஸ் –ரூ6000/-
அத்திவரதர் அருகில் நின்று தரிசனம் செய்ய ரூ10000/-
அத்திவரதர் வைபவத்தில் சுமார் 60 இலட்சத்துக்கு அதிகமானவர்கள் டோனர், வி.ஐ.பி, வி.வி.ஐ.பி பாஸ் இல்லாமல் எந்த வித அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் ஆறு மணி, ஏழு மணி நேரம் வரிசையில் நின்று, 50 அடி தூரத்தில் அத்திவரதரை ஒரு வினாடிதான் தரிசனம் செய்ய முடிந்தது.
ஆனால் வி.வி.ஐ.பி பாஸ் வைத்திருந்தால், நான்கு அடி தூரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்தார்கள். அர்ச்சகர் தட்டில் ரூ500/- போட்டால், அத்திவரதர் அருகில் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் பச்சையப்பாஸ் சில்க் பெயரில் அச்சிட்ட ஐந்து அத்திவரதர் படத்துடன் பூஜை செய்யப்பட்ட பூக்களுடன் அர்ச்சகர் கொடுப்பார். ரூ1000/- போட்டால் 10 அத்திவரதர் படத்துடன் பூஜை செய்யப்பட்ட பூக்கள் கிடைக்கும்.
ஆனால் பிரபலமான ரவுடி வரிச்சூர் செல்வம், மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜயகாந்த், நடிகை நயந்தாரா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காஸ்டாலின், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட V.V.V.V.V.V.V.V.I.Pபிரமுகர்கள் அத்திவரதர் சிலை முன்பு சம்மணம் போட்டு உட்கார்ந்து, 10 நிமிடம், 15 நிமிடம் தரிசனம் செய்தார்கள். இப்படி தரிசனம் செய்ய அர்ச்சகருக்கு ரூ10,000/-, ரூ20,000 கொடுக்கப்பட்டது.
பாபுஷா உள்ளிட்ட சிலர் வி.வி.ஐ.பி பாஸ் ரூ6000/- வி.ஐ.பி பாஸ் ரூ4500/- டோனர் பாஸ் – ரூ2500- ரூ3000/- விற்பனை செய்தார்கள்.
ஆசிக் என்ற புரோக்கர் அவரை செல்போனில் வணக்கம் ஜி என்ற சொன்னவுடன் வி.வி.ஐ.பி பாஸ் நம்மிடம் ரூ6000/-தான் மற்ற இடங்களில் ரூ7000 என்று அலட்சியமாக பதில் சொல்லுகிறார்(நம்மிடம் ஆசிக் ஆடியோ உள்ளது)
பாபுஷாவிடம், அர்த்திவரதர் முன்பு சம்மணம் போட்டு உட்கார்ந்து அல்லது நின்றுக்கொண்டு தரிசனம் செய்ய வேண்டும் என்று செல்போனில் ஆசிக் மூலம் பேசினேன்.
வி.வி.ஐ.பி பாஸ் இருந்தால் எனக்கு ரூ2000/- அர்ச்சகருக்கு ரூ5000/-இரவு 9மணிக்கு மேல்தான் தரிசனம் செய்ய முடியும், அத்திவரதரை தரிசனம் செய்வது போல் போட்டோவும் எடுத்துக்கொள்ளலாம் என்று பதில் சொன்னார்.
டோனர் பாஸ், வி.ஐ.பி பாஸ்(டோனர் பாஸ் மஞ்சள் கலரில்) வி.வி.ஐ.பி பாஸ்(டோனர் பாஸ் பச்சை கலரில்) 5 இலட்சம் அச்சடிக்கப்பட்டுள்ளது. டோனர் என்றால் நன்கொடையாளர் என்று பொருள்.
5 இலட்சம் பேர் நன்கொடை கொடுத்தார்களா என்று கேள்வி கேட்காதீர்கள்..வி.ஐ.பி பாஸ், வி.வி.ஐ.பி பாஸ் சுமார் ஒரு இலட்சம் போலி பாஸ் அச்சடிக்கப்பட்டு ரூ4000 – ரூ6000 வரை விற்பனை செய்யப்பட்டது.
14,15ம் தேதிகளில் அத்திவரதர் தரிசனத்தில் மழை நீரில் மக்கள் வரிசையில் நின்றுக்கொண்டு இருப்பதை பார்க்கும் போது, மாவட்ட நிர்வாகத்தின் மீது கோபம்தான் வந்தது.. பெரிய இடத்து விவகாரம்..நமக்கேன் வம்பு என்று செல்போனில் படம் எடுத்துக்கொண்டு புறப்பட்டோம்.
காசே தான் கடவுளப்பா- அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா – என்ற சினிமா பாடல்தான் நினைவுக்கு வருகிறது.