இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் (வயது 57). இவர் சென்னை மயிலாப்பூர் விஸ்வேஸ்வர்புரத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு சந்திரசேகர் வீட்டின் அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கதவைத் தட்டினர். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது வி.பி. சந்திரசேகர் அங்கு தூக்கில் பிணமாகத் தொங்கினார். அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மயிலாப்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறை சென்று கதவை உடைத்து உள்ளே சென்று சந்திரசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொழிலில் ஏற்பட்ட நட்டம் காரணமாக வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்திய அணிக்காக 1988 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை 7 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 88 ரன்கள் எடுத்துள்ளார். அதிரடி பேட்ஸ்மேனான அவர் தமிழக அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் 81 ஆட்டங்கள் ஆடி, 4,999 ரன்கள் குவித்துள்ளார். ஒரு ஆட்டத்தில் 56 பந்தில் சதம் அடித்ததும் அடங்கும். தமிழக அணிக்கு பயிற்சியாளராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.
மேலும், தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்து வந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணி பிளே-ஆப் சுற்றை எட்டியது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை செய்துகொண்ட வி.பி.சந்திரசேகருக்கு சவுமியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
அவர் தற்போது முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரோடு வர்ணனையாளராக இருந்தார். அவர்கள் இருவரும் இவர் மறைவுக்குக் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.