வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 22 ஆவது நாளாகத் தொடர்கிறது.ஆனாலும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் அரியானாவின் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த சந்த் பாபா ராம் சிங் (வயது 65) என்ற சீக்கிய மதகுரு சிங்கு எல்லையில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு வந்தார். பின்னர் போராட்டக்களத்துக்கு அருகே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘விவசாயிகளின் அவலத்தைத் தாங்க முடியவில்லை’”அரசாங்கத்தின் அநீதிக்கு எதிராக கோபத்தையும் வலியையும் வெளிப்படுத்த” தனது உயிரைத் தியாகம் செய்வதாக பஞ்சாபி மொழியில் எழுதப்பட்டிருந்தது.
மேலும் கடிதத்தில் விவசாயிகள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்த போராடும் வேதனையை நான் உணர்கிறேன் … அரசாங்கம் அவர்களுக்கு நீதி வழங்காததால் நான் அவர்களின் வலியைப் பகிர்ந்து கொள்கிறேன். அநீதியை ஏற்படுத்துவது ஒரு பாவம், ஆனால் அநீதியைப் பொறுத்துக்கொள்வதும் ஒரு பாவமாகும். விவசாயிகளுக்கு ஆதரவளிக்க, சிலர் தங்கள் விருதுகளை அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளனர், நான் என்னைத் தியாகம் செய்ய முடிவு செய்துள்ளேன் என தில் கூறி இருந்தார்.
இந்த நிகழ்வு விவசாயிகளின் போராட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சந்த் பாபா ராம் சிங் இறுதிச் சடங்குகள் இன்று கர்னாலில் நடைபெறும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தற்கொலை தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார். பிரதமர் மோடி தனது பிடிவாதத்தை விட வேண்டும் என அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகளும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்த் பாபா ராம் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “சந்த் பாபா ராம் சிங் ஜியின் தற்கொலை பற்றிய செய்தி வேதனையானது. இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் விவசாயிகள் தங்கள் உரிமைகளைக் கேட்கிறார்கள். விவசாயிகளின் குரலை அரசாங்கம் கேட்க வேண்டும், மூன்று கறுப்புச் சட்டங்களும் திரும்பப் பெறப்படவேண்டும்” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.