மூலவரை நோக்கித் திரும்புகிறது விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் தில்லி எல்லைகளில் விவசாயிகள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்தச் சட்டங்கள் விவசாயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைய வழிவகை செய்யும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில் தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மும்பையில் உள்ள தொழிலதிபர் அம்பானியின் கார்பரேட் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாய அமைப்பான சுவாபிமானி சேத்காரி சங்கட்னா தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜூ ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…..

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் அம்பானி மற்றும் அதானி போன்ற முதலாளிகளுக்கு பயனளிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளன. அதானி, அம்பானியின் நன்மைக்காக விவசாயிகளை அடிமையாக்குவதே மத்திய அரசின் நோக்கம். இந்த நோக்கத்தை நாங்கள் அறவே எதிர்க்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் நடைபெற அனுமதிக்க மாட்டோம்.

வரும் 22 ஆம் தேதி மும்பையில் உள்ள அம்பானியின் கார்பரேட் வீட்டின் முன்பு இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தலையிட்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 சட்டங்களையும் இரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் போராட்டத்தில் சுவாமிமானி சேத்காரி சங்கட்னாவை தவிர, பிரகர் சங்கதானா, விவசாயிகள் கட்சி, லோக் சங்கர்ஷ் மோர்ச்சா உள்ளிட்டவையும் கலந்து கொள்ளவுள்ளன.

இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக, அரசாங்கம் கொண்டுவந்த சட்டத்தை இரத்து செய்யக்கோரி ஒரு தொழிலதிபர் வீட்டுமுன்பு போராட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பெருந்தொழிலதிபர்களும் மோடி அரசும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response