பாரத் பெட்ரோலியப் பொருட்கள் புறக்கணிப்பு – விவசாயிகள் அதிரடி முடிவு

எதிர்ப்பை மீறி விளை நிலங்களில் குழாய்கள் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினால் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் பொருட்களைப் புறக்கணிப்போம் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து, கர்நாடக மாநிலம் தேவன்கொந்தி வரை சுமார் 320 கி.மீ. தொலைவிற்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் குழாய்கள் மூலம் பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குழாய்கள் அனைத்தும் விவசாய விளைநிலங்கள் வழியாகக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதால் இந்தத் திட்டத்தை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இந்தத் திட்டத்தின்படி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகளின் விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

எனவே விவசாயிகள் இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதோடு, விளைநிலங்களைக் கையகப்படுத்தி இழப்பீடு வழங்கும் பணிகளுக்காக தனி அதிகாரியையும் நியமித்துள்ளது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதிகளின் வரைபடங்கள் மற்றும் மத்திய அரசிதழ் நகல் ஆகியவை தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அரசிதழ் நகல் இல்லாததால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளதாகக் கூறி பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கோவை பெங்களூரு எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பொன்னையன், வழக்கறிஞர் ஈசன், ஜெயப்பிரகாசு மற்றும் நிர்வாகிகள் நேற்று கோவை இருகூரில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து ஒருங்கிணைப்பாளர் கி.வே.பொன்னையன் கூறியதாவது:

18/06/2019 காலை 11.00 மணியளவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி அவர்களை காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாரத்பெட்ரோலிய IDPL திட்டத்தால் பாதிக்கப்படும் உழவர்கள் குடும்பத்துடன் சந்தித்தோம்.

கெயில் திட்டத்தை சாலையோரமாகத் தான் போடவேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த கொள்கையைப் பின்பற்ற வேண்டி மனுக் கொடுத்தோம்.

மக்கள் நலனுக்கு எதிராக விளை நிலங்களுக்குள் அத்துமீறி பாரத்பெட்ரோலிய நிறுவனம் நுழைய முயன்றால் அந்த நிறுவனத்தை மக்களுக்கு எதிரானது என அறிவித்து அதன் விற்பனைப் பொருட்களைப் புறக்கணிப்பது.ஒத்துழையாமை இயக்கம் மேற்கொள்வது என அறிவிக்கை செய்தோம்.

மேலும், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் பெட்ரோல், டீசல் ஆகியவற்றைக் குழாய்கள் வழியாக கொண்டு செல்வதாகக் கூறி தற்போது ஈரோடு, கோவை, திருப்பூர் உள்பட 7 மாவட்டங்களில் உள்ள விவசாய விளைநிலங்களைக் கூறுபோட ஆயத்தமாகி வருகின்றது.

ஏற்கனவே உயர் மின்கோபுரங்கள், 8 வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எக்காரணம் கொண்டும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம். திட்டம் குறித்து அரசிதழில் வெளியிடப்பட்ட 21 நாட்களுக்குள் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மார்ச் மாதமே அரசிதழில் வெளியிடப்பட்ட விபரம் தற்போது தான் விவசாயிகளுக்குத் தெரியவந்துள்ளது. அரசிதழ் முழுமையாகக் கிடைக்கவில்லை. இதனால் சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்ட முடியாமல் உள்ளது.

மேலும் எதிர்ப்பையும் மீறி இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் பெட்ரோல், டீசல் வாங்குவதை விவசாயிகள் புறக்கணிப்போம் என்றும், எங்களது கிராமங்களில் பாரத் பெட்ரோலிய நிறுவன லாரிகள் வந்தால் சிறைபிடிப்போம் என்றும் அதிகாரிகளிடம் எச்சரித்துள்ளோம்.

இவ்வாறு கி.வே.பொன்னையன் கூறினார்.

Leave a Response