போராடிய மேற்கிந்தியத்தீவுகள் அதிர்ஷ்ட ஆஸ்திரேலியா

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 10 ஆவது லீக் ஆட்டம் நேற்று (ஜூன் 6) நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். இதில் ஆரோன் பிஞ்ச் 6 ரன்னிலும், டேவிட் வார்னர் 3 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

பின் களமிறங்கிய உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும், மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமலும், மார்கஸ் ஸ்டோனிஸ் 19 ரன்னிலும் அவுட்டாகி நடையை கட்டினர். இருப்பினும் ஒருபுறம் நிலைத்து ஆடிய ஸ்டீவன் சுமித் உடன் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டம் அணியை சரிவிலிருந்து மீட்டது.

ஆனால் எதிர்பாராதவிதமாக அலெக்ஸ் கேரி 45 ரன்னில் கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நாதன் கவுல்டர் நிலே அதிரடியாக ஆட அணியின் ஸ்கோர் மள மளவென உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் போக்கை மாற்றிய ஸ்டீவன் சுமித் தனது அரைசதத்தை பதிவு செய்த நிலையில் 73 ரன்னில் கேட்ச் ஆனார். அவருக்குப் பின் களமிறங்கிய கம்மின்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மேற்கிந்தியத் தீவுகளின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்ட நாதன் கவுல்டர் நிலே 60 பந்துகளில் 92 ரன்கள் குவித்த நிலையில் பிராத்வெய்ட் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

இறுதியில் ஆஸ்திரேலிய 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 288 ரன்களை எடுத்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிராத்வெய்ட் 3 விக்கெட்களும், ஒஷானே தாமஸ், ஷெல்டன் காட்ரெல், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், ஆஷ்லே நர்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் களமிறங்கினர். இதில் இவின் லீவிஸ் 1 ரன்னிலும், சிறிது ரன் சேர்த்த கிறிஸ் கெய்ல் 21 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர்.

பின் ஜோடி சேர்ந்த நிகோலஸ் பூரன் மற்றும் ஷாய் ஹோப் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் ஓரளவு உயர்ந்தது. இதில் நிகோலஸ் பூரன் 40 ரன்னில் கேட்ச் ஆகி வெளியேறினார். பின் களமிறங்கிய ஹெட்மயர் 21 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தை பதிவு செய்த ஷாய் ஹோப் 68 ரன்னில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து ஆந்த்ரே ரஸ்செல் 15 ரன்னிலும், பிராத்வெய்ட் 16 ரன்னிலும், தனது அரைசதத்தை பதிவு செய்த ஜாசன் ஹோல்டர் 51 ரன்னிலும், காட்ரெல் 1 ரன்னிலும், என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர்.

இறுதியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 273 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாகப் பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்களை சாய்தார். மேலும் கம்மின்ஸ் 2 விக்கெட்களும், ஆடம் ஜம்பா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Leave a Response