மேற்கு வங்கத்தில் அதிகம் மகாராஷ்டிராவில் குறைவு – 4 ஆம் கட்டத் தேர்தல் தொகுப்பு

2019 இந்திய நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 4 ஆவது கட்டமாக நேற்று (ஏப்ரல் 29) 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மத்தியபிரதேச மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. 207 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சில குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் எந்திரங்கள் மாற்றப்பட்டன.

அதேபோல 106 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கிய பின்னர் மின்னணு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் அவைகளும் மாற்றப்பட்டன.

சித்தி தொகுதியில் தேர்தலைப் புறக்கணிப்பதாக வாக்காளர்கள் அறிவித்திருந்தனர். ஆனாலும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வாக்குப்பதிவில் ஈடுபடச் செய்தனர்.

இந்த மாநிலத்தில் 6 நாடாளுமன்ற தொகுதிகள் தவிர்த்து சிந்த்வாரா சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு முதல்வர் கமல்நாத் போட்டியிடுகிறார். மாநிலத்தில் 6 மணி அளவில் சராசரியாக 66.09 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.

மேற்குவங்காள மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு இடத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் ஒரு இடத்தில் தடியடி நடந்தது. ஆங்காங்கே ஒருசில இடங்களில் மோதல் நடைபெற்றாலும் மாநிலத்தில் 6 மணி அளவில் சராசரியாக 76.47 சதவீதம் ஓட்டு பதிவானது.

மராட்டிய மாநிலத்தில் வடக்கு, மேற்கு பகுதிகள் மற்றும் மும்பையில் உள்ள 17 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி இங்கு சராசரியாக 52.07 சதவீதம் வாக்குகள் பதிவானது.

ஒடிசா மாநிலத்தில் 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 41 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது.

இதில் பலிகுடா–எரசமா சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தொண்டர் லச்மான் பெஹெரா என்பவர் ஓட்டு போட்டுவிட்டு திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உடைந்த பாட்டிலால் பெஹெராவை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் பெஹெரா பரிதாபமாக இறந்தார்.

ஜாஜ்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் 3 தேர்தல் அலுவலர்கள் விதிகளை மீறியதாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் வாக்காளர்களுக்கு உதவுவதாக கூறி ஓட்டு போடும் பகுதிக்கு சென்றனர். இதனை வெப் கேமரா மூலம் கண்காணித்த தேர்தல் அதிகாரி இந்த நடவடிக்கையை எடுத்தார். மாநிலத்தில் சராசரியாக 65 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.

ஜார்கண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. 4 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்த அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். எங்கும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. சராசரியாக 63.76 சதவீத ஓட்டுகள் பதிவானது.

பீகாரில் 53.67 சதவீதமும், ராஜஸ்தானில் 62.93 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 53.12 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது. காஷ்மீரில் மிக குறைந்த அளவாக மாலை வரை 9.79 சதவீத வாக்குகளே பதிவானது. மொத்தமாக 72 தொகுதிகளிலும் சராசரியாக மாலை 6 மணி வரை 64 சதவீத ஓட்டுகள் பதிவானது.

Leave a Response