மீண்டும் வென்றார் டிடிவி.தினகரன்

ஜெ மறைவுக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக இரண்டாகப் பிரிந்திருக்கிறது. ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பு அதிமுகவாகச் செயல்படுகிறது. டிடிவி.தினகரன் அமமுக என்கிற பெயரில் செயல்படுகிறார்.

இந்நிலையில் இரட்டை இலை கட்சி சின்னம் கோரி அமமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் இரட்டை இலை சின்னத்தை ஆளும் கட்சியான அதிமுக கட்சிக்கே ஒதுக்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்தக் கட்சியைப் பதிவு செய்யாத காரணத்தால் குக்கர் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

மேலும் தேர்தலில் போட்டியிட சின்னம் ஒதுக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பின்னர் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் சுயேச்சையாக பரிசுப்பெட்டகம் சின்னத்தில் போட்டியிட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் 4 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தர்ராஜ், சூலூர் தொகுதியில் கே சுகுமார், திருப்பரங்குன்றம் தொகுதியில் மகேந்திரன், அரவக்குறிச்சி தொகுதியில் சாகுல் ஹமீது ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அமமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டகம் சின்னத்தை வழங்கக் கோரி கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டகம் சின்னத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இதனால் வழக்கு நடக்குமுன்பே வெற்றி பெற்றுவிட்டார் டிடிவி.தினகரன். ஏற்கெனவே நீதிமன்றம் சென்றுதான் இந்தச் சின்னத்தை அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response