சமஸ்கிருதத்தைப் படிக்க கட்டாயப்படுத்துவதா? – சீமான் கண்டனம்

நாகை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மாலதி, திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் வினோதினி ஆகியோரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி சார்பில் பரப்புரைக் கூட்டம் திருவாரூர் பனகல் சாலையில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சீமான் பேசியதாவது….

சாதி, மதம் போன்ற பிரிவுகளால் தமிழ்ச் சமூகம் வீழ்ச்சியடைந்து வருகிறது. இன்று சொந்த நிலத்தில் அடிமைகளாக வாழ வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தவர்கள் மீண்டும் வாக்குக் கேட்டு அதிகாரத்துக்கு வர நினைக்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ள வேண்டு்ம்.

கச்சத்தீவை மீட்பதாக அ.தி.மு.க., தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது. கச்சத்தீவை திரும்பிக் கேட்க இயலாது என்ற கொள்கையுடைய கட்சிகளாக காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் இருந்து வருகிறது. மாநில உரிமையைக் காப்போம் என்று கூறிவிட்டு, நமது உரிமை பறித்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளனர். 7 தமி்ழர் விடுதலை குறித்து தி.மு.க, அ.தி.மு.க. குரல் கொடுக்கிறது. ஆனால் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் விடுதலை செய்ய முடியாது என கூறி வருகிறது.

இந்தியாவின் மூத்த மொழி தமிழ். சமஸ்கிருதத்தை படிக்க கட்டாயப்படுத்த முடியாது. பா.ஜனதா ஆட்சி காலத்தில் 2 கோடி பேர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவத்தை இலவசமாகத் தருவோம். தடையற்ற மின்சாரம் தருவோம். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வோம்.

இயற்கையைப் பாதிக்காமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவோம். விவசாயத்தைப் பாதிக்கும் திட்டத்தை நிச்சயம் அனுமதிக்க மாட்டோம். இலவச அரிசித் திட்டம் என்பது ஏற்க முடியாது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயிக்க வேண்டும்.

நிலத்தடி நீர் வற்றி வருகின்ற நிலையில், அதைப் பெருக்க எந்தத் திட்டமும் எந்தக் கட்சிகளிடமும் இ்ல்லை. ஆனால் நாம் தமிழர் கட்சிதான் அதற்கான திட்டங்களை வகுத்து வைத்துள்ளது.

இவ்வாறு சீமான் பேசினார்.

Leave a Response