மோடி பற்றி பேசியதால் தகாத சொற்களில் வசைபாடுகிறார்கள் – நடிகை ரோகிணி வேதனை

நடிகை ரோகிணி மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்துள்ளார். அதில்,

எனக்கு மோடியிடம் கேட்க ஒன்றும் இல்லை. ஆனால், அவரிடம் சொல்வதற்கு ஒரு விஷயம் மட்டும் உள்ளது. ப்ளீஸ் தேர்தலில் போட்டியிடாதீர்கள்! காரணம் இனிமேலும் இப்படியொரு பாசிசமான ஆட்சி எங்கள் நாட்டுக்குத் தேவையில்லை. கடந்த 5 ஆண்டுகளாக இந்துத்வாவை அதிக அளவில் கண்டுவிட்டோம். இந்துத்துவாவுக்கு எதிரானவர்களை, எதிராகப் பேசுபவர்களைக் கொலை செய்பவர்களை ஆதரவளித்து ஊக்குவிக்கும் ஒருவர் நாட்டின் தலைவராக மீண்டும் வருவதை நாங்கள் விரும்பவில்லை

என்று கூறியிருந்தார்.

இதனால் பாஜகவினர் அவர் பற்றி ஏராளமாக வசைபாடுகிறார்களாம். இதனால் மனம் நொந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

மோடிக்கு எதிராக என் பேச்சை கருத்தியல் ரீதியாக எதிர்க்கொள்ளாமல்,என் எண்ணைப் பகிர்ந்து தகாத விதமாக பேசுபவர்களின் பண்பு என்னவென்பது தெரிய வருகிறது.வசவுச் சொற்கள் எல்லாமே பெண்ணையே மையப்படுத்தி இருப்பதையும் கவனிக்க வைக்கிறார்கள்

இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.

அவர்களுடைய தரம் அவ்வளவுதான், இதற்காகச் சோர்ந்துவிடாதீர்கள், துணிவுடன் இருங்கள் என்று அவருக்குப் பலர் ஆறுதல் சொல்லிவருகின்றனர்.

Leave a Response