அநீதியே 28 ஆண்டுகள் போதாதா – ட்விட்டரில் தெறிக்கிறது தமிழர்கள் மனநிலை

25ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி 6 மாதங்களுக்கு மேலாகிவிட்டது.

ஏற்கெனவே 1999 ஆம் ஆண்டில் நால்வரின் கருணை மனுக்களை அப்போதைய ஆளுநர் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டபோது, அதை ஏற்று ஆளுநரின் ஆணை செல்லத்தக்கது அல்ல என உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

1980ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் “அரசியல் சட்டம் 161ஆம் பிரிவின்படி சிறைவாசிகளின் தண்டனையை குறைத்தல், விடுதலை செய்தல் ஆகிய நடவடிக்கைகள் குறித்து மாநில அமைச்சரவை ஆளுநருக்கு ஆலோசனை வழங்கும். அந்த ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவராவார்” எனத் தெளிவாகக் கூறியுள்ளதை சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டித் தீர்ப்பளித்தது.

அதற்குப் பின்னரே மத்திய, மாநில அமைச்சரவைகளின் ஆலோசனைகளை குடியரசுத் தலைவரும், ஆளுநர்களும் ஏற்றுத் தீரவேண்டிய கட்டாயம் உருவாயிற்று. எனவே, மேலும் காலதாமதம் செய்யாமல் அரசியல் சட்டத்தையும், அமைச்சரவையின் ஆலோசனையையும் மதித்து 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் சட்டப்பூர்வமான கடமையாகும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று மாலை 4 மணி முதல் ஆறு மணி வரை (மார்ச் 9,2019) நடைபெறவிருக்கிற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறு நாம் தமிழர் கட்சி, தமிழர் தேசிய முன்னணி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ்த்தேசிய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

இதையொட்டி ட்விட்டர் வலைதளத்தில் அநீதியே 28 ஆண்டுகள் போதாதா, #28YearsEnoughGovernor ஆகிய குறிச்சொற்கள் வேகமாகப் பரவி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Leave a Response