மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மோடிக்கு ஏற்ப இயங்கும் – ஈரோடு கூட்டத்தில் பேச்சு

புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து ஈரோட்டில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு புஇமுவை சேர்ந்த செயப்பிரகாசம் தலைமை தாங்கினார்.

புஇமுவை சேர்ந்த கவி, கெளரி லங்கேஷ் மற்றும் கி.வே.பொன்னையன், திகவைச் சேர்ந்த சண்முகம், சித்திக், ஆதி தமிழர் பேரவை வீரவேந்தன் உள்ளிட்டோர் பேசினர்.

சரவணன் “அஞ்சாமல் போராடு, மயிரைக் கட்டி மலையை இழுத்தார் பெரியார், வந்தா மலை போனா மயிரு என்று கொள்கைக்காக வாழ்ந்தார் பெரியார்” என்ற பாடலைப் பாடினார். தமிழ் அழகு என்ற பாடலுக்கு புஇமு பெண்கள் நாட்டிய நடனம் நிழ்த்தினர்,

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசியவர்களின் உரைகளில் இருந்து சில செய்திகள்…

செயப்பிரகாசம் :-

இன்றைக்கு மோடி அரசு உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக ஆண்டுக்கு 8 1/2 லட்சம் வருமானம் உள்ளவர்கள் ஏழைகள் என்று சொல்கிறது,

இதற்கு முன்பு காங்கிரசு அரசு நாளொன்றுக்கு 32 ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்றது, சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் இந்தியாவில் 2 டாலருக்கு கீழே வருமானம் கொண்டவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்கிறது.

உயர் சாதி என்று வரும் போது இவர்களுக்கு இந்த அளவு கோல்கள் எல்லாம் காணமல் போய் விடுகிறது.

இதே போல் கிருஷ்ணசாமி குறவர்கள் போன்றவர்களுக்கு கூட இட ஒதுக்கீடு வேண்டியதில்லை, இட ஒதுக்கீடு தான் ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் சாதியாக மாற தடையாக உள்ளது என்கிறார்.

ஆனால் உயர் சாதியினருக்கான இந்த ஒதுக்கீட்டை ஆதரிக்கிறார். இந்த வேறுபடு யாருக்கு சாதகமானது என்று கேள்வி எழுப்பினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாவட்ட காவல்துறை தடை விதித்தைக் கண்டித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நீதி மன்றத்தில் அனுமதி பெற்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

கெளரி லங்கேஷ் :-

பெரியார் மற்றும் நீதிக்கட்சி போன்ற நம் முன்னோர்களின் போராட்டம் தான் இன்றைக்கு நாம் இந்தளவுக்கு சாதி ஒடுக்குமுறையிலிருந்து வெளியே வந்து பேசும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மனுதர்மம் பார்ப்பனியம் சாதிய ஒடுக்குமுறை போல் பெண்கள் மீது கடும் ஒடுக்குமுறை செலுத்தியது, வேதம் ஒதும் போது பெண்கள் தலையில் முக்காடு போட்டு, காதுகளை மூடிக்கொள்ள வேண்டும் வேதங்களை பெண்கள் கேட்கக் கூடாது என்று மனுதர்மம் பெண் ஒடுக்குமுறை செய்து வந்தது.

கனவன் இறந்த பின் பெண் நெருப்பில் போட்டு எரிக்கப்பட்டாள். சிலப்பதிகாரம் கூட கண்ணகி மன்னனிடம் நீதி கேட்பது என்கிற கருத்து சரியாக இருந்தாலும், கோவலன் மாதவியிடம் செல்வதை அங்கீகரக்கும் கண்ணகியின் கருத்து ஆணதிக்க கருத்து தான்.

பெண்களுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற குணங்களோடு பெண்கள் அடங்கி இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் வகுத்து வைத்துள்ளது.
ஆக பார்ப்பனிய ஒடுக்குமுறைகளில் இருந்து வெளி வர இறையாண்மை கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்க போராடுவதே நமது கடைமையாகவுள்ளது என்று பேசினார்.

திக சண்முகம் : –

பெரியார் இட ஒதுக்கீட்டை முன் வைத்துத் தான் காங்கிரசுக் கட்சியிலிருந்து வெளியே வந்தார். நீதிக்கட்சி அதன் தொடர்ச்சி 1947 வரை இட ஒதுக்கீடு முறையாக தொடரப்பட்டது.

அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இட ஒதுகீட்டை, 1950 களில் அரசியல் சட்டத்தை எழுதிய அல்லாடி கிருஷ்ண அய்யர் போன்ற பார்ப்பனர்களே இட ஒதுக்கீடுக்கு எதிராக நீதிமன்றத்தில் வதாடி இட ஒதுக்கீடு உரிமையை பறித்தனர். இதற்கு பின்னும் இட ஒதுக்கீடு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுக்களே அதை வலுவாக வைக்கவில்லை, இதற்கு பின் மண்டல் கமிஷன் தான் இந்தியா முழுதும் ஆய்வு செய்து பிற்பட்டோர் இட ஒதுக்கீடு பரிந்துரை செய்தது,

விபி சிங் அரசு இதை உறுதியாக நடைமுறைப்படுத்தியது இவ்வாறாக போராடி பெற்ற உரிமை இன்று பறிபோகிறது என்று இட ஒதுக்கீடு வரலாற்றை பேசினார்.

கி.வே.பொன்னையன் : –

இட ஒதுக்கீடே முழுமையான தீர்வு என்று நாம் நம்பவில்லை, இந்த இட ஒதுக்கீட்டால் பயன்பெற்ற அதிகாரிகள் தான் இன்றைக்கு இந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர்.

இந்த சமூக நீதியால் பயன்பெற்றவர்கள் தான் இன்றைக்கு கார்ப்ரேட்களுக்கு ஆதரவாக, விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க, விவசாயிகளை ஒடுக்குகிறார்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களை பிடுங்குகிறார்கள். எனவே வர்க்கப் போராட்டத்தோடு இட ஒதுக்கீடு என்பது இணைய வேண்டும்.

மேலும் இவ்வளவு பேசக்கூடிய டி.கே.ரங்கராஜன் போன்றவர்கள் பாராளுமன்றத்தில் உயர்சாதியினருக்கு ஆதரவான நிலை எடுக்கின்றனர். த.பாண்டியன் இஎம்எஸ் காலத்தில் இருந்தே நாங்கள் இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக கட்சிக்குள் பேசி வந்தோம் என்று பேசியுள்ளார். இவ்வாறாக அக்கட்சிகளுக்குள்ளும் முரண்பாடுகள் வெளிப்படுகிறது என்றார்.

கவி : –

இட ஒதுக்கீடு என்பதையே பார்ப்பனர்கள் தான் கொண்டு வந்தனர், இந்தந்த சாதியினர் இன்ன இன்ன தொழில் தான் செய்ய வேண்டும் என்று இட ஒதுக்கீடு செய்ததே பார்ப்பனியம் தான் என்று நலங்கிள்ளி சொல்வார்.

சாதிய ஒடுக்குமுறை, மொழி தேசிய ஒடுக்குமுறை கொண்ட பார்ப்பனிய சமூக அமைப்பு இது என்று தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி 92 ல் தீர்மாணித்தது. இன்றைக்கு இது மக்கள் உணரத்தக்க உண்மைகளாக மாறி வருவதை காண்கிறோம்.

பார்ப்பன ஆதிக்கம் குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகம் போன்றவற்றில் மட்டுமல்ல, ஊடகங்களில் பார்ப்பன ஆதிக்கம் தான் நிலவுகிறது.

மக்கள் என்ன சிந்திக்க வேண்டும்எதைப்பேச வேண்டும் என்பதைக் கூட ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனியம் தான் தீர்மானிக்கிறது. தந்தி டிவியை சமீப காலம் வரை ஆதிக்கம் செய்தது பாண்டே தான், தற்போது மோடிக்கு ஆதரவாக வெளிப்படையாக உள்ளார்.

நாம் சாதிய ஒடுக்குமுறை மொழி ஒடுக்குமுறை பற்றி எவ்வளவோ பேசியும் பரப்புரை செய்தும் வந்தோம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி அரசு நடைமுறைப்படுத்திய கொள்கைகள் பார்ப்பனிய ஒடுக்குமுறை என்றால் என்ன என்பதை மக்களுக்கு தெளிவாக உணர்த்திவிட்டது.

இந்தியா என்பது இந்து நாடு, இந்து என்பது சனாதனம் பார்ப்பனியம் என்பது தெளிவாக்கி விட்டது.
கார்ப்ரேட்களின் செல்லப் பிள்ளையாக மோடி, ஐட்ரோ கார்பன், கெயில், என்றும் நீட் தேர்வு, இந்தி வாரம் சமக்கிருத ஆதிக்கம், நவோதயா பள்ளி, பசு பெயரால் ஒடுக்குமுறை தற்போது உயர்சாதிக்கு இட ஒதுக்கீடு என்று பார்ப்பனிய கார்ப்ரேட் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

கீழடி, ஆதிச்சநல்லூர், சிந்துசமவெளி ஆய்வு முடிவுகள் இவைகளெல்லாம் தமிழரின் தொன்மையான நாகரிகங்கள் என்று அறிவித்த போதும் அவைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படமால் அந்த முடிவுகள் உறங்குகிறது.

இனி வரும் தேர்தல்களிலும் இவர்களே வருவார்கள், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் இவர்களுக்கு ஏற்ப இயங்கும், வாக்குசீட்டு முறைக்கு மாறினாலும் கார்ப்ரேட்கள் பார்ப்பனியர்களின் விருப்பங்கள் தான் தேர்தல் முடிவுகளாக இருக்கும்.

தேர்தல்களைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. மக்கள் ஆளும்வர்க்கங்களின் செயல்களை எதிர்த்து கர்ப்ரேட்களுக்கு எதிராகவும் நீட்டுக்கு எதிராகவும் போராடி வருகிறார். மக்களே மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று பேசினார்.

Leave a Response