சாதி மதம் அற்றவர் சான்றிதழ் பெற்றவருக்குப் பாராட்டுகள் – இது சரியா?

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபராஜா. இவர், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிநேகா (34). இவர், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார்.

சட்டப்படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற சிநேகா, சாதி, மதம் அற்றவர் என திருப்பத்தூர் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழைப் பெற்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவிலேயே சாதி, மதம் குறிப்பிடாமல் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சிநேகா அடைந்துள்ளார்.

இந்தத் தகவலை அறிந்த பல்வேறு தரப்பினர், அவரைத் தொலைபேசி மூலமாகவும், நேரில் சந்தித்தும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்வினையாக பேராசிரியரும் கவிஞருமான பச்சியப்பன் எழுதியுள்ள பதிவு…..

சாதி மதம் இல்லாதவர் என்று ஒருவர் சான்றிதழ் பெற்றதற்காக பெரும் பாராட்டுகளும், பின்பற்றப் போவதாக அறிவிப்புகளும் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.

எனில் சாதிச் சான்றிதழ் வைத்திருக்கிற நான் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக வேண்டும் என்கிற பார்வையும் இங்கே தோற்றுவிக்கப்படுகிறது என்று ஐயம் கொள்கிறேன்.

நான் சான்றிதழ் பெற்றது வாய்ப்புகள் சம அளவில் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்கிற சமூக நீதி அடிப்படையிலானது.

நான் என்ன சாதி என்பது சமூக இயக்கத்தின் வாயிலாக எனக்கு கிடைத்த ஒன்று. மனிதகுலம் குழுவாக இயங்குவதை நாம் தவறு என்று சொல்ல முடியாது. பதினெட்டாம் நூற்றாண்டு முன்பு வரை கிராமம் ஒரு நிறுவனமாகவே செயல்பட்டு வந்திருக்கிறது.அதன் சாதக பாதகங்கள் பற்றி நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. அதற்காக வரலாற்றை முற்றிலுமாக புறந்தள்ளவும் இயலாது.

தொழில் நகரங்கள் பெருகி விட்ட பிறகு எல்லா இடங்களிலும் அதன் இறுக்கம் குறைந்து தேவைகளுக்கு ஏற்ப நெகிழ்ச்சி உடையதாக மாறிக்கொண்டு இருப்பதாக நாம் உணர்கிறோம்.

மனித ஏற்றத்தாழ்வுகளை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும் அதனைக் களைய வேண்டும். ஆனால் குழுவாக இயங்குவதை நாம் எக்காலத்திலும் ஒழித்துவிட முடியுமா என்பதை இப்போது நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

வாய்ப்புகளை நமக்கான தேவைகளை குழுக்களாக இயங்கும் ஒருவரால்தான் அடைய முடியும்.தனியாக காட்டுக்குள் வாழ்வதற்கான சூழல் நம்மிடம் இல்லை. பல்வேறு குழுக்களின் இணக்கமான இயக்கம்தான் ஒரு சமூக வளர்ச்சிக்கு உதவும்.

எனவே இருக்கின்ற குழுவிலிருந்து ஒருவர் வெளியேறி நான் எந்தக் குழுவிலும் இல்லாதவர் என்று அறிவிப்பதால் அவர் சரி என்றும் குழுக்களாக இயங்குபவர்களை தவறு என்றும் பார்க்கிற பார்வையை நாம் என்னவென்று புரிந்து கொள்வது.

ஆம் நான் குழுவில் தான் இருக்கிறேன் குழுக்களில் ஒரு உறுப்பினராகத் தான் இயங்குகிறேன்.
எனக்குக் கீழானவர் யாரும் இல்லை. அதேபோல் எனக்கு மேலானவர் என்று எவர் சொன்னாலும் அதை நான் ஒப்புக் கொள்ளவும் இயலாது.

– உழவன் பச்சியப்பன்

Leave a Response