பெயர் குறிப்பிடாமல் ப.சிதம்பரத்தைக் கடுமையாகத் தாக்கிய மோடி. இதனாலா?

பிரதமர் மோடி பிப்ரவரி 10,2019 அன்று திருப்பூர் வந்தார். அங்குள்ள பெருமாநல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு அதே பகுதியில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 8 நாடாளுமன்ற தொகுதிகளின் பாரதீய ஜனதா தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கு கொண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது மோடி எதிர்க்கட்சிகளைக் கடுமையாகத் தாக்கியதோடு, தனக்கு எதிராக கூட்டணி அமைக்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு ஆவேசமாகக் கேள்வியும் எழுப்பினார்.

காங்கிரசு முக்கியதலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்தைப் பெயர் குறிப்பிடாமல் அவர் தாக்கிப் பேசினார். அவர் பேசியதாவ்து….

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடுத்தர மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. அப்போது அமைச்சராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சர்’ (ப.சிதம்பரத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்) நடுத்தர மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவர் யார் என உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். இந்த உலகத்தில் இருக்கிற அறிவு முழுவதும் அவரிடம் மாத்திரமே இருக்கிறது என்று நினைக்கிறார். “நடுத்தர மக்கள் விலைவாசி உயர்வு பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்.? அவர்கள்தான் விலை உயர்ந்த ஐஸ்கிரீமையும், மினரல் வாட்டரையும் வாங்குகிறார்களே” என்று ஆணவமாக அவர் பேசினார்.

அந்த மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சருக்குச் சொல்கிறேன். நடுத்தர வர்க்கத்தினர் காங்கிரஸ் கட்சியினரின் கேளிக்கைப் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. அதனால்தான் உங்களைத் தோற்கடித்து இருக்கிறார்கள்

ப.சிதம்பரம் பற்றி இவ்வாறு மோடி பேசினார்.

ப.சிதம்பரம் பற்றி இவ்வளவு ஆவேசமாக அவர் பேச என்ன காரணம்?

மோடியின் தமிழக வருகையையொட்டி ப.சிதம்பரம் சில கேள்விகள் கேட்டிருந்தார்.

அவை….

  • பணமதிப்பு நீக்கம் செய்த திரு மோடி இன்று தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன
  • ஒழுங்காக வரி கட்டி நடந்து கொண்டிருந்த
    தொழில்களை நசுக்கியது யார்?
  • ஜிஎஸ்டி அடிப்படையில் நல்ல கொள்கை. அதைக்
    கோமாளித்தனமாக அமுல்படுத்தி அந்தச் சட்டத்தைப் பொல்லாத சட்டமாக மாற்றியது யார்?
  • பணமதிப்பு நீக்கம், கோமாளித்தனமான ஜிஎஸ்டி சட்டம் ஆகியவற்றை கொண்டு வந்த திரு மோடி அவர்களே, உங்கள் மடியில் இன்னும் உள்ள ஆயுதங்கள் என்னவோ?
  • எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
  • இன்றைய ஆட்சியாளர்களைக் கருத்தில் கொண்டு அன்றே திருவள்ளுவர் சொன்னாரோ?

வழக்கமாக ஆங்கிலத்தில் ட்வீட் செய்துவரும் ப.சிதம்பரம், மோடியின் தமிழக வருகையையொட்டி தமிழில் இந்த ட்வீட்களைச் செய்திருந்தார்.

இது மோடியைக் கடுமையாகப் பாதித்தது என்றும் அதனாலேயே அவர் ப.சிதம்பரத்தை மட்டும் தாக்கிப் பேசினார் என்றும் அப்படித் தாக்கிப் பேசும்போது அவருடைய பெயரை வெளிப்படையாகச் சொல்லாமல் கிசுகிசு போல் பேசினார் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

Leave a Response