மம்தா அரசைக் கலைக்க முயல்வதா? – மோடிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

மேற்குவங்க மாநிலத்தில் அரசியல் சட்டத்தை மீறி மத்திய புலனாய்வு அமைப்பை ஏவி மம்தா அரசை மோடி மிரட்ட முயன்றார். அதற்கு அஞ்சாமல் தீர்முடன் எதிர்த்துப் போராடி வருகிறார் மம்தா என்று இந்தியாவெங்கும் சொல்லப்படுகிறது.

இந்நிகழ்வு குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர்
பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

மாநில அரசின் ஒப்புதல் பெறாமலும், சட்டப்பூர்வமான ஆவணங்கள் இல்லாமலும், முன்னறிவிப்பு கொடுக்காமலும் கல்கத்தா காவல் ஆணையரின் வீட்டிற்கு இரவு நேரத்தில் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சென்றது ஏன்? விசாரணை நடத்துவதாக இருந்தால் முறைப்படி அவருக்கு முன்னறிவிப்பு அனுப்பி தங்கள் அலுவலகத்திற்கு வரவழைத்திருக்க வேண்டும். இதை செய்யத் தவறிவிட்ட மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளை மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தியிருப்பது சரியானதே.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மாநில அரசுகளை மிரட்டுவதற்கு மத்திய புலனாய்வுத்துறையை பா.ச.க. அரசு பயன்படுத்துவதைக் கண்டித்து, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்டுள்ள போராட்டம் மாநில உரிமைகளை காப்பதற்கான போராட்டமாகும். இதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு இருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். அதற்கேற்ற வகையில் அம்மாநில ஆளுநாிடமிருந்து அறிக்கையையும் பெற்றிருக்கிறார்.

மேற்கு வங்க அரசைப் பதவி நீக்கம் செய்ய வகுக்கப்பட்டுள்ள இந்த சதித் திட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, மத்திய புலனாய்வுத்துறை மேற்கொண்ட வழிமுறைகளை கண்டிப்பதாகவே அமைந்துள்ளது. காவல் ஆணையாளரைக் கைது செய்யக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது மத்திய அரசின் உள்நோக்கத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response