இந்தியா- ஆஸ்திரேலியா மட்டைப்பந்தாட்ட அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட்கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் விஜய் சங்கர், கேதர் ஜாதவ் மற்றும் சஹால் சேர்க்கப்பட்டனர்.
போட்டியின் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். புவனேஷ்வர் குமார் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
27 ரன்களை எடுப்பதற்குள் ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
உஸ்மான் கவாஜா- ஷான் மார்ஷ் ஜோடி நிதானமான ஆட்டத்தால் அந்த அணி கெளரவமான ஸ்கோரை நோக்கி நகர்ந்தது இந்த ஜோடியை சாஹல் பிரித்தார். பின்னர் வந்த வீரர்களில் ஹேண்ட்ஸ்ஹோம் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 48.4 ஓவர்களில் 230 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்திய அணி தரப்பில் சஹால் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
59 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டை இழந்தது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமான இருந்ததால் கோலி – தோனி ஜோடி நிதானமாகவே ரன்களை சேர்த்தனர்.
கோலி 46 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ் தோனிக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார். இவர்கள் இருவரும் பெரும்பாலும் ஓடியே ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடிய தோனி அரைசதம் கடந்தார். இந்தத் தொடரில் தோனி அடிக்கும் மூன்றாவது அரைசதமாகும்.
சிறிது நேரத்தில் ஜாதவ் தனது அரைசதத்தை கடந்தார். கடைசி வரை களத்தில் இருந்த இந்த ஜோடி போட்டியை தித்திப்பாக முடிந்து வைத்தனர்.
இந்திய அணி 49.2ஓவர்களில் 234 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.
ஐந்துநாள் தொடரை கைப்பற்றிய நிலையில் இப்போது ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.