சென்னையில் கலைஞர் சிலை திறப்பு – ரஜினி கமல் பங்கேற்பு

திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, ஆகஸ்ட் 7,2018 அன்று மறைந்தார்.

அவருடைய முழு உருவ வெண்கலச் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. எட்டு அடி உயர வெண்கலச் சிலையை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு கிராமத்தில் தீனதயாளன் என்ற சிற்பி மற்றும் அவரது குழுவினர் வடிவமைத்துள்ளனர்.

அந்தச் சிலை திறப்புவிழா இன்று (டிசம்பர் 18,2018) மாலை நடக்கவிருக்கிறது.

அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் மு.கருணாநிதி சிலையை நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி திறந்து வைக்கிறார்.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி மற்றும் தேசிய, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்தும், பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசனும் பங்கேற்க உள்ளனர்.

சிலை திறப்புவிழாவைத் தொடர்ந்து இராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கவிருக்கிறது.

அங்கு அண்ணா அறிவாலயம் போல காட்சியளிக்கும் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்புவிழாவில் பங்கேற்கும் அனைவரும் பொதுக்கூட்டத்தில் கல்ந்துகொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

சென்னை வரும் சோனியா காந்தி, மெரினா கடற்கரையில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு கூட்டத்தில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

Leave a Response