மோடி பிரதமர் ஆன பின்பு மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநர்களுக்கும் மோதல் போக்கு தொடங்கியது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 2013 செப்டம்பர் முதல் இருந்த ரகுராம் ராஜன்,மோடி பதவியேற்ற சில மாதங்களில் (செப்டம்பர் 2016) தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே ரகுராம் ராஜன் ராஜினாமா செய்தார்.
அதன்பின் பொறுப்பேற்ற உர்ஜித்படேல், தனிப்பட்ட காரணங்களைக் காரணம் காட்டி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்தமைக்காகப் பெருமை கொள்வதாகவும், சக ஊழியர்களுக்கும், இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார்.
மோடி அரசுடன் மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் அவருடைய ராஜினாமா முடிவு இந்தியாவில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசியல் தலைவர்கள் அனைவரும் கடுமையாக மோடி அரசை விமர்சித்து வருகிறார்கள்.
டெல்லியில் எதிர்க்கட்சிகளின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திந்த ராகுல் காந்தி, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளைப் பா.ஜ.கவிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து உர்ஜித் ராஜினாமா செய்திருப்பது மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் நிதிக் கொள்கை, பொருளாதார அமைப்பு மீது அதீத அக்கறை கொண்டவரான உர்ஜித் ராஜினாமா செய்திருப்பது துரதிஷ்டவசமானது. இந்தியப் பொருளாதாரத்தின் மீது விழுந்த பெரும் அடி என்று தெரிவித்திருக்கிறார்.
மோடி பதவியேற்ற பின்பு இரண்டாவது ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலகியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.