தமிழ்ப்பண்பாட்டுக்காகப் போராடினால் சமூகவிரோதியா? – பாரதிராஜா கோபம்

இசக்கி கார்வண்ணன் எனும் புதிய இயக்குநர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் பெட்டிக்கடை. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது…

விழாவில் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சமுத்திரகனி, வீரா இயக்குனர் இசக்கி கார்வண்ணன், இசையமைப்பாளர் மரியா மனோகர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாடலாசிரியர் மறத்தமிழ் வேந்தன் ஆகியோரும் பங்குபெற்றனர்.

விழாவில் பேசிய பாரதிராஜா,

பெட்டிக்கடை என்பது நம் பண்பாட்டின் அடையாளம். நமது ஊர்களில் கடைகளை பெட்டிக்கடை என்று தான் அழைப்பார்கள். பழமையைப் பேசினால் எங்கு நாம் பின்னோக்கிப் போகிறோமோ என்று தோன்றும். ஆனால் அப்படியல்ல. நம் பண்பாட்டை நாம் பேண வேண்டும்; பேச வேண்டும். அப்படியான பண்பாட்டுக்கு நாம் போராடினால் நம்மை சமுக விரோதி என்கிறார்கள். இன்று சமூகத்திற்காக போராடினால் சமூகவிரோதி.

இந்தப் படத்தின் பாடல்களைப் பார்க்கும் போது என்னை நானே கண்ணாடியில் பார்த்துக் கொண்டது மாதிரி இருக்கு.பாட்டே இப்படி இருக்கும் போது படம் எப்படி இருக்கும்னு நெனச்சி பார்த்தேன்.அற்புதமாகவே இருக்கும்னு சொல்வேன்.

இந்தப் படத்துல நடிச்ச ஹீரோ அப்படியே மண்வாசனை முகம்.தமிழன் இப்படித்தான் இருப்பான்.

என் படத்து ஹீரோக்கள் எல்லோருமே நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிற முகமாத் தான் இருப்பாங்க.

மண்வாசனையை நாம் என்றும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

இந்த இயக்குநர் பெட்டிக்கடை- without GST என்று வைத்திருக்கிறார்.இவருக்கும் பிரச்சனை வரலாம் போராடித்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் நாம் நம் பாரம்பர்யத்தை இழந்து விடுவோம்.

தமிழை இழந்து விடுவோம்..நம் மண்ணை இழந்து விடுவோம்.ஏன் இந்த பூமியையே இழந்து விடுவோம்.

இந்தப் படம் இசக்கி கார்வண்ணன், சமுத்திரகனி, வீரா, மரியா மனோகர், மறத்தமிழ் வேந்தன் என எல்லோருக்குமே நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித்தரும்.

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

Leave a Response