இரா.முத்தரசன் நடித்த அரிசி படவிழா – அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

அறிமுக இயக்குநர் எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரிசி’ எனும் திரைப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு செயலாளர் இரா.முத்தரசன், சமுத்திரக்கனி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.இவர்களுடன், சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஜான்ஸ் வி ஜெரின் ஒளிப்பதிவு செய்ய கே எஸ் நதிஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

விவசாயத்தையும்,விவசாயிகளையும் மையப்படுத்திய உணர்வுபூர்வமான படைப்பாகத் தயாராகி இருக்கும் இந்தப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிப்ரவரி 14,2026 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி,அரிசி படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ பெற்றுக்கொண்டார். 

இந்நிகழ்வில் வைகோ பேசியதாவது….

அரிசி உயிரின் மறு பெயர் எனும் இந்தப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவரான
இரா.முத்தரசன் உழவனாகவே மாறியிருக்கிறார்.அவர் நடிப்புக் கலையைப் பயின்றவர் அல்ல.ஆனால் இயற்கையாக அவர் கட்டியிருக்கும் தலைப்பாகையுடன் தொலி உழவு செய்யப்பட்ட வயலில் நெற்கதிரை இலாவகமாக வீசுகிறாரே..அது நெடுங்காலமாக வயலில் நெற்கதிரை வீசி இருந்தால் மட்டுமே அப்படி நெல்லை வீசமுடியும். 
அண்ணன் முத்தரசன் கலைஉலகில் பிரவேசித்திருக்கிறார்.எந்தப் பயிற்சியும் முன்அனுபவமும் கிடையாது.ஆனால் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் என்பதை இப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த சில நிமிடங்களிலேயே உணர முடிந்தது. 
அரிசி திரைப்படத்தில் சிம்பொனி இசைஅமைத்து உலகப்புகழ் பெற்றாரே..அண்ணன் கலைஞரால் இசைஞானி என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மாமேதையினுடைய இசையமைப்பிலே வெளியான உருவான பாடல்கள் பின்னணி இசை இதயத்தைக் கவர்வதாக அமைந்திருக்கிறது. 
இந்தப்படம் விரைவில் வெளிவரும் என்பதை நான் அறிந்தேன்.அது மக்களின் ஆதரவைப் பெறும் என்று நான் நம்புகிறேன்.விவசாய மக்களுக்கு உழவர் பெருங்குடி மக்களுக்கு ஒரு அரிசிதான் உலகத்தைக் காப்பாற்றுகின்ற உயிர்க்கருவி என்கின்ற தத்துவத்தை தருகின்ற இந்த திரைக்காவியம் மகத்தான வெற்றி பெறுவதற்கு தமிழகத்தில் வாழும் கோடான கோடி விவசாயப் பெருமக்கள்..நான் இதுவரை எந்த மேடையிலும் திரைப்படங்களைப் பாருங்கள் என்று விளித்ததில்லை.ஆனால் மண்ணை நம்பி கலப்பையை நம்பி விதைக்கும் விதைகளை நம்பி உலகத்தை வாழ்வித்துக் கொண்டிருக்கக்கூடிய பசிப்பிணி போக்குகின்ற மருத்துவர்களாகத் திகழ்கின்ற விவசாயப் பெருமக்கள் நீங்கள் திரையரங்கங்களுக்கு வரவேண்டும்.அரிசி உன்னதமான வெற்றியைப் பெற்றது என்ற நிலையை விவசாயிகள் உருவாக்க வேண்டும்.உங்கள் துயரங்கள் போராட்டங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் கலை உலகம் அரசியலையும் நாட்டின் தலைவிதியையும் தீர்மானிக்கின்ற இடத்தில்..வேளாண்மை இருப்பதால் விவசாயம் இருப்பதால் இந்தக் காவியம் வெற்றி பெறும்.இதில் பங்கெடுத்து இருக்கக்கூடிய அனைத்து நடிகர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய சமுத்திரக்கனி அவர்கள் இன்னும் உயர்ந்த விருதுகளை அவர் நடித்த திரைப்படங்களின் மூலமாகப் பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.இந்தப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.என்னை உயிராக நேசிக்கும் முத்தரசனுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து,அரிசி திரைப்படத்தில் மட்டுமல்ல..எதிர்காலத் தேர்தல் களத்திலும் நாங்கள்தான் வெல்வோம் எனக்கூறி விடைபெறுகிறேன் நன்றி என்றார். 

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்…..

அண்ணன் இரா.முத்தரசன் – சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகி இருக்கும் அரிசி திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கும் திரு.செல்வப் பெருந்தகை – திரு.வைகோ- திரு.திருமாவளவன் – திரு.வீரபாண்டியன் – திரு.பேராசிரியர் காதர் மைதீன்- திரு.புதுமடம் அலி- திரு.பழ.ஆசைத்தம்பி- திரு.செல்வராஜ் – திரு.சண்முகம் – திரு.வன்னியரசு – திரு.எஸ்.எஸ்.பாலாஜி-
திரு.மாரிமுத்து – திரு.ரூபி மனோகரன் – திரு.கனகராஜ் – திரு.திருமுருகன் காந்தி- மருத்துவர் ஷர்மிளா-
திரு.சிற்றரசு- திரு.முகமத் அபுபக்கர் – தயாரிப்பாளர் சண்முகம்- இயக்குநர் விஜயகுமார்-
திரு ஆர்.கே.செல்வமணி- மற்றும் இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் காலை வணக்கம். 
முதலில் இந்தத் திரைப்படக் குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் இதுபோன்ற திரைப்படங்களின் இசை மற்றும் முன்னோட்ட விழாவை மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் நடத்துவார்கள்.மிகப்பெரிய திரையரங்கத்தில் நடத்துவார்கள்.ஆனால் அரிசி திரைப்படக் குழுவினர் இந்த நிகழ்ச்சியை கலைஞர் கட்டிய இந்த வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியதற்கு முதலில் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
அமைச்சராகப் பொறுப்பேற்ற இந்த நான்காண்டு காலங்களில் திரைப்படம் தொடர்பான எந்த நிகழ்விலும் கலந்து கொண்டதில்லை.இது அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நன்கு தெரியும்.யார் கேட்டாலும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று உறுதியாகச் சொல்லிவிடுவேன்.ஆனால் அண்ணன் முத்தரசன் கேட்கும்போது என்னால் தட்டிக்கழிக்க முடியவில்லை.நீங்கள் தேதியைச் சொல்லுங்கள் நான் உறுதியாக வந்து விடுகிறேன் என்று சொன்னேன்.அதன்பிறகு நேரம் கேட்டார்.அதையும் நீங்களே சொல்லுங்கள் என்று சொன்னேன். 
பல வருடங்களாக கொடுக்காமல் இருந்த திரைப்படத் துறையினருக்கான தமிழக அரசின் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது.இதற்காக குழு அமைக்கப்பட்டது.2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை திரைப்பட விருதுகளை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. 
நான் திரைத்துறையில் இருந்து வெளியேறி,மக்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.ஆனால் இன்று நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரான அண்ணன் முத்தரசன் அவர்கள் மக்கள் பணியில் இருந்து சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார்.அவர் சினிமா துறைக்கு வந்திருந்தாலும் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றாலும் அவர் மக்கள் பணிக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்.அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.அவர் சினிமாவில் உச்சத்திற்குப் போனாலும் அவர் எப்போதும் விரும்புவது மக்களோடு மக்களாக இருப்பதைத்தான்.இது தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். 
அரசியலில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கும் அண்ணன் முத்தரசனுக்கு திரைத்துறையில் முன்னால் இருந்தவர் என்ற வகையில் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். 
மக்களுக்காகப் பல்லாண்டு காலம் களத்தில் போராடியவர்தான் அண்ணன் முத்தரசன்.திரையிலும் மக்களுடைய உரிமைகளை..உரிமையுடன் பேச வந்துள்ளார்.அதிலும் குறிப்பாக இந்தப்படத்தில் அவர் விவசாயியாக நடித்திருக்கிறார்.இந்தப்படத்தின் போஸ்டர்,ட்ரெய்லர்,பாடல்களைப் பார்க்கும்போது அவர் விவசாயியாக நடித்திருக்கிறார் என்பதை விட விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியும். 
முத்தரசன் மட்டுமல்ல அண்ணன் சமுத்திரக்கனியும் கம்யூனிஸ்ட் கொள்கைகளை தொடர்ந்து பேசக்கூடியவர். விவசாயிகளுகாக கம்யூனிஸ்ட்கள் களத்தில் இறங்கிப் போராடினால் நிச்சயம் அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்தமுறையும் வெற்றி பெறுவார்கள்.அதேபோல் இந்தப்படமும் நிச்சயமாக வெற்றிப் படமாக அமையும். 
இந்தப்படத்தின் தலைப்பு அரிசி உயிரின் மறு பெயர் என வைத்திருக்கிறார்கள்.இந்த அரிசிக்காக ஒருகாலத்தில் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள்.பண்ணையார்களிடம் வாழ்க்கை முழுவதும் அடிமையாக இருந்தார்கள். காலமெல்லாம் வயலில் வேலை பார்த்தாலும் அவர்களுக்கு என்று ஒருநேர சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாமல் இருந்தது.அப்படிப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் உரிமைக்காகக் களத்தில் இறங்கி கம்யூனிஸ்டுகள் எத்தனையோ போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். 
அதனால் டாக்டர் கலைஞர் அடிக்கடி சொல்வார்.நான் மட்டும் தந்தை பெரியாரையும்,அண்ணாவையும் என் வாழ்க்கையில் சந்திக்காமல் இருந்திருந்தால்…நானும் ஒரு கம்யூனிஸ்ட் தோழனாக மாறி இருப்பேன் என அடிக்கடி சொல்வார். 
அப்படிப்பட்ட கலைஞர் தான் 1969 ஆம் ஆண்டில் ஆட்சிக்கட்டிலில் ஏறிய பிறகு ஏழைகளுக்கு அரிசி கிடைப்பதற்கான எல்லா வழிவகைகளையும் செய்து கொடுத்தார்.ஒரு படி அரிசிக்காக யாரும் மற்றவர்களின் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கக் கூடாது எனும் நிலைமையை தமிழகத்தில் ஏற்படுத்தியவர் டாக்டர் கலைஞர். 
இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் 2006 சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி ஒன்றை அளித்தார்.2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என முதன்முதலில் அறிவித்தார்.இது மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.ஏனெனில் அந்தக்காலத்தில் பல குடும்பங்களுக்கு அரிசிச் சோறு என்பது மிகப்பெரிய கனவாக இருந்தது.அந்தக் கனவை நனவாக்கியவர் டாக்டர் கலைஞர்.பின்னர் அந்த ரெண்டு ரூபாயை ஒரு ரூபாயாகக் குறைத்தார்.அதற்கு அடுத்த கட்டமாகத்தான் இன்று விலையில்லா அரிசியும் வந்திருக்கிறது.மக்களுடைய அடிப்படைத் தேவையான இந்த அரிசி பிரச்சனையை போக்கியவர் டாக்டர் கலைஞர்.அந்தவகையில் விவசாயிகளின் உரிமையைப் பேசும் இந்தப்படம் நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.அண்ணன் முத்தரசனின் அரசியல் களப்பணியும்,கலைப் பணியும் மென்மேலும் சிறக்கட்டும் என உங்கள் அனைவரின் சார்பாக நான் வாழ்த்துகின்றேன் என்றார்.

செல்வப்பெருந்தகை பேசுகையில்….

இந்தத் திரைப்படம் ஒரு வெற்றி பெற்ற திரைப்படமாக மாறவேண்டும்.இந்தக் காலகட்டத்திற்கு எது தேவையோ அதை தோழர் முத்தரசன் அவர்கள் முன்னெடுத்திருக்கிறார்.நேற்று நான் ஒரு வேளாண்மை தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டபோது இந்தியாவில் 53.8 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி பற்றாக்குறை இருக்கிறது. கடந்த 2023 -24 ஆண்டு ஒப்பிடும்போது ஒவ்வொரு ஆண்டும் அரிசியின் உற்பத்தி குறைந்து வருகிறது. வேளாண்மைத் திட்டங்கள் இந்தியாவில் சரியாகச் செயல்படவில்லை.ஒருபக்கம் இயற்கையின் சீற்றம்
(பருவமழை மாறி பொழிவது – வறட்சி ஏற்படுவது- தட்பவெப்ப நிலை மாறுவது- மண்ணின் தரம் – வளம் ஒவ்வொரு முறையும் மாறுவது) இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவில் அரிசி உற்பத்தி குறைந்து கொண்டே இருக்கிறது. 
வேளாண்மைத் துறை இந்தியாவில் தினம் தினம் அழிந்து வருவதற்கு காரணம் ஒரு நேர்மையற்ற ஆட்சி கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.ஏற்கனவே வேளாண்மை குடிமக்களுக்கு எதிராக மூன்று சட்டங்களை நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் வாக்கெடுப்பும் இல்லாமல் பாஜக அரசு நிறைவேற்றியது.இந்தியாவில் உள்ள அனைத்து வேளாண்மை குடிமக்களும் விவசாயப் பெருங்குடி மக்களும் ஒன்று திரண்டு புதுடெல்லியை முற்றுகையிட்டு 13 மாதங்கள் போராடினர்.இந்தப்போராட்டத்தில் பல உயிர்களை பலி கொடுத்தனர்.அதற்குப்பிறகு மோடி அவர்களுக்குத் தெளிவு பிறந்து,எப்படி இரவோடு இரவாக எந்த விவாதமும் இல்லாமல் மூன்று கருப்பு சட்டங்களைக் கொண்டு வந்தார்களோ..அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். 
அமெரிக்க – இந்திய வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய வேளாண்மைக் குடிமக்களின் வாழ்வாதாரத்தை அடகு வைத்திருக்கிறார்கள்.இந்தக் காலகட்டத்தில் அரிசி என்ற இந்தத் திரைப்படம் திரைப்படமாக வருவதை விட பாடமாக எடுத்துக்கொண்டு விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும்.விவசாய மக்களுடைய வாழ்வாதாரத்திற்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டும்.ஆகவே இந்தத் திரைப்படம் வெற்றித் திரைப்படமாக மாறவேண்டும்.எல்லோரும் பார்க்கவேண்டும்.ஏற்கனவே இந்தத் திரைப்படத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிடும் என்று அறிவிப்பு செய்திருந்தோம்.அதற்குரிய செலவையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்கும்.இப்படிப்பட்ட திரைப்படங்களை ஊக்கவிக்க வேண்டும்.ஆகவே இந்தத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநருக்கும் நடிகர்களுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பொதுவாழ்க்கையில் இருந்துகொண்டே திரைப்படத்திற்கு வருகை தந்திருக்கும் முத்தரசனுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

தொல் திருமாவளவன் பேசுகையில்…..

இந்தத் திரைப்படம் பொருத்தமான காலச்சூழலில் வெளி வருகிறது.அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்திருக்கும் இந்திய பிரதமர் மோடி அவர்கள் அல்லது பாஜக அரசு 20 ஆண்டுகளுக்கு வரி இல்லாமல் அமெரிக்காவிடமிருந்து கோதுமை,அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அனைத்தையும் இறக்குமதி செய்வதற்கு உடன்பட்டு இருக்கிறார்கள்.எந்தப் பொருளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தாலும் வரி இல்லை என்ற நிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.இது உழவர்கள் – விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 
பிப்ரவரி பன்னிரண்டாம் தேதி இடதுசாரி இயக்கங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்தியா முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடத்தினர்.விடுதலைச் சிறுத்தைகளும் அதில் இணைந்து பங்கேற்றியது.விவசாயிகள் இனி உற்பத்தியே செய்யமுடியாது என்கிற நிலையை நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம். 
இந்தப்படத்தில் நான் அரிசியை உற்பத்தி செய்கிறேன்.அதற்கான விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் இல்லையா? எனக் கேள்வி கேட்கிறார்கள். 
நாம் இந்தக்கேள்வியில் உள்ள ஆழத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.இன்னும் ஆதார விலையை நிர்ணயிப்பதற்கான சட்டத்தைக் கொண்டுவர முடியவில்லை.மற்றவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலையை நிர்ணயிக்க முடிகிறது.ஆனால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் அரிசி,கோதுமை உள்ளிட்ட பொருள்களுக்கு ஆதார விலையைக் கூட நிர்ணயிக்க முடியாத சூழல் இருக்கிறது.இது எங்கே கொண்டுபோய் முடியும்.விவசாய உற்பத்தி எதிர்காலத்தில் என்னவாக இருக்கப்போகிறது என்ற அச்சத்தை எமக்கு ஏற்படுத்தி இருக்கிறது. 
பெரும்பாலான நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன.சென்னையை ஒட்டியுள்ள பயிர் நிலங்கள் அனைத்தும் தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது.ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் விவசாய நிலங்கள் அனைத்தும் தற்போது பிளாட்டுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. நமக்கான தேவைக்கு நாமே உற்பத்தி செய்யக்கூடிய நிலை அருகி வருகிறது.ஒருகாலத்தில் நமக்கான காய்கறிகளை நம்மூர் சந்தையில் உள்ளூர் சந்தையில் பெற முடிந்தது.கம்பு வரகு சோளம் போன்ற நமக்கான தானியங்களை நம்மால் உற்பத்தி செய்துகொள்ள முடிந்தது.இன்றைக்கு அந்த விவசாயம் இருக்கிறதா என்றால் இல்லை.நம்முடைய வீட்டில் இருக்கும் ஆடு மாடுகளின் கழிவுகளைச் சேகரித்து அதனை எருவாக மாற்றி விவசாய நிலத்தைப் பண்படுத்துவதற்கு நாம் பயன்படுத்தி வந்தோம்.அக்காலமும் உண்டு.அரசாங்கம் இதைத்தான் பயிரிட வேண்டும் என்று வற்புறுத்திய நிலை அன்று இல்லை.ஆனால் இன்று உலகச்சந்தைக்கான உற்பத்தி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.கரும்பு உற்பத்தி,மக்காச்சோள உற்பத்தி அதற்கு அவன் உரம் கொடுக்கிறான்.அவனே பூச்சி மருந்து கொடுக்கிறான்.விவசாயிகள் தமக்கான உற்பத்தியில் சுதந்திரமாக ஈடுபட முடியாத நிலை..
உலகச் சந்தைக்கன உற்பத்தியும் கூட அவன் விரும்புகிற வகையில் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறான். அதிலும் விவசாயிகளுக்கு சுதந்திரம் இல்லை.நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.கோடிக்கணக்கான மக்கள் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக மாறியுள்ளனர்.விவசாயிகள் வேறு விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேறு விவசாயக்கூலிகளுக்கு நிலம் வேண்டும் என்ற போராடிய காலம் போய் தற்போது விவசாயத்திற்கே நிலமில்லாத சூழல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.இந்தநிலையில்தான் நெல் உற்பத்தி அரிசி போன்றவற்றைக் குறித்து நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம். 
விவசாயம் பாழ்பட்டுப் போனால் எதிர்காலச் சந்ததியினரின் நிலை கவலைக்குரியதாக மாறும்.வேளாண் சட்டங்கள் எந்த அளவிற்கு உழவர்களுக்கு எதிராக விவசாயிகளுக்கு எதிராக விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது என்பதை நாம் அறிவோம்.பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் வராது இருந்தால் அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்று இருக்கமாட்டார்கள்.ஆனால் விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற்ற அரசு,தொழிலாளர்களுக்கான தொகுப்புச் சட்டங்களை இன்னும் திரும்பப் பெறவில்லை.
44 சட்டங்கள் இருந்தன.அவை அனைத்தையும் நான்காகத் தொகுத்து விட்டார்கள்.தொழிலாளர்கள் சங்கம் அமைக்க முடியாத நிலை…தங்களுடைய ஊதியத்தை கூலியை கோரிக்கையாகக் கூட வைக்க முடியாத நிலை. இதெல்லாம் எங்கே கொண்டு போகும் என்ற கவலை இருக்கிறது.
இப்படிப்பட்டச் சூழலில் இடதுசாரி இயக்கங்களின் தலைவர் மக்களோடு மக்களாகக் களத்தில் நின்று போராடி மக்களுக்காக தன் வாழ்க்கையை ஒப்படைத்துக் கொண்ட ஒரு தலைவர் இன்றைக்கு திரைத்துறையில் ஒரு நாயகனாக பாத்திரமேற்று நடித்திருக்கிறார் என்பது ஒரு திரைக்கவர்ச்சிக்கான அணுகுமுறை அல்ல.அதிலும் ஒரு அரசியல் அதுவும் நமக்கான அரசியல் இருக்கிறது.இடதுசாரி அரசியல் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். 
சமுத்திரகனி சொன்ன விசயங்களை நான் வழிமொழிகிறேன். 
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் கலைத்துறையும் அரசியல்துறையும் பின்னிப் பிணைந்தாக இருக்கிறது.தனக்கான முதலமைச்சரை திரையில் தேடுபவன் ஆக தமிழர்கள் இருக்கிறார்கள் எனப் பேசுவதை நாம் பார்க்கிறோம். 
இங்கு கருத்தியலுக்கு போராட்டங்களுக்கு தியாகங்களுக்கு முற்போக்கு சிந்தனைகளுக்குத் தரப்படுகிற முக்கியத்துவத்தை விட..இத்தனை கோடி வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் எங்கள் தலைவர் ஆகவே அவரை முதலமைச்சராக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய நிலை தமிழகத்தில் இருக்கிறது. 
ஊரு ஊராய்ச் செல்லவேண்டாம். மக்களுக்காகப் போராட வேண்டாம். வழக்குகளைச் சுமக்கவேண்டாம் தடியடி வாங்கவேண்டாம். சிறைக்குச் செல்லவேண்டாம்.திரையில் தோன்றினால் தமிழகத்தில் முதலமைச்சராகி விடமுடியும்.இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்று.
இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் நடிகர்கள் இருக்கிறார்கள்,இயக்குநர்கள் இருக்கிறார்கள்.சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள்.இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஆன அமிதாப்பச்சன் முதலமைச்சராக விரும்பியதில்லை.கேரளாவில் மம்முட்டி போன்ற சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள்.அவர்களும் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை.ஆந்திராவிலும் உண்டு கர்நாடகத்திலும் உண்டு ஆனால் தமிழகத்தில் மட்டும் ஒருபடத்தில் நடித்தால் போதும் அடுத்து தமிழகத்தில் முதலமைச்சர் ஆகலாம் என்கிற நிலை. 
ஜனநாயகத்தில் எல்லோருக்கும் அந்த உரிமை உண்டு.நான் அதை மறுக்கவில்லை.ஆனால் இந்தச் சிந்தனைப் போக்கு இருக்கிறதே இந்த உளவியல் இருக்கிறதே இந்தத் திரைத்துறை தமிழக அரசியலில் ஏற்படுத்தியிருக்கிற தாக்கம் இருக்கிறதே அது பிற்போக்கானதாக இருக்கிறது என்ற கவலை இருக்கிறது.சமுத்திரக்கனி இங்கு இடதுசாரிகள் கலைத்துறையில் இன்னும் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்பதை முன்மொழிந்திருக்கிறார் என நான் நம்புகிறேன்.திரைத்துறையில் பல கம்யூனிஸ்ட் தோழர்கள் இருக்கிறார்கள்.
தோழர்களே இன்று வலதுசாரிகளின் அரசியல் மேலோங்கி இருக்கிறது.எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றி விடமுடியும் என்ற உத்திகளை அவர்கள் கையாளுகிறார்கள்.மாநிலத்திற்கு மாநிலம் அவர்கள் உத்திகளை மாற்றுகிறார்கள். 
தமிழகத்தில் சிவபெருமானைச் சொல்லியோ அல்லது மகாவிஷ்ணுவைச் சொல்லியோ இராமபிரானைச் சொல்லியோ அரசியல் செய்து வெற்றி பெறமுடியாது.முருகப் பெருமானைச் சொல்லிப் பார்த்தார்கள்.வேலை தூக்கிப் பார்த்தார்கள் அது எடுபடவில்லை.திருப்பரங்குன்றத்தையும் கையில் எடுத்துப் பார்த்தார்கள். அவர்களின் அரசியல் இங்கே வெற்றி பெறவில்லை. 
ஆகவே திரைத்துறை சார்ந்தவர்களை வளைத்துப் போட்டு அதன்மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி..டெல்லியை போல் தமிழகத்திலும் ஒரு உத்தியைக் கையாளுகிறார்கள். 
ஆட்சி மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.இன்றைக்கு இருக்கும்.நாளைக்குச் செல்லும்.ஆனால் யார் எந்த சிந்தனை உள்ளவர்கள் என்ன அரசியல் பேசக்கூடியவர்கள்.எந்த நிலைப்பாட்டைக் கையில் எடுக்கிறவர்கள் ஆட்சியில் இருக்கவேண்டும் என்ற பார்வை நமக்குத் தேவைப்படுகிறது.வலதுசாரிகளின் கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவது ஒட்டுமொத்த தேசத்திற்கே தீங்கு விளைவிப்பதாகும்.அமெரிக்காவுடன் போடப்பட்டிருக்கும் ஒப்பந்தம் இதற்கு ஒரு சான்று. 
விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால் விவசாயக் கூலித் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் இந்திய மண்ணில் இடதுசாரி அரசியல் இன்னும் வலுப்பெற வேண்டும்.அனைத்துத் தளங்களிலும் அது விரிவடைய வேண்டும்.தமிழ்நாட்டில் அது திராவிடம் என்ற பெயரில் இயங்குகிறது என்பதால்தான் இடதுசாரிகள் திராவிடக் கட்சிகளுடன் குறிப்பாக இன்று மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்று இயங்கி வருவதை நாம் பார்க்கிறோம். 
பெரியாரிய அரசியலும் மார்க்சிய அரசியலும் அம்பேத்கரிய அரசியலும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கக் கூடியது. முதன்மைப்படுத்துவதில் முரண்பாடுகள் இருக்கலாம்.ஆனால் இவை அனைத்தும் இடதுசாரி அரசியல்தான்.எனவே நாம் அந்தப் புரிதலுடன் திரைத்துறையையும் கையாளுவோம் என்ற நம்பிக்கையில்தான் அண்ணன் முத்தரசன் அவர்கள் இந்தப்படத்தில் நாயகனாகத் தோன்றியிருக்கிறார் என்று நம்புகிறேன். 
அவர் இந்தக் கலைத்துறையை இடதுசாரி மயப்படுத்துவதற்கு பொறுப்பு இருக்கிறது பண்பு இருக்கிறது நானும் உணர்கிறேன்.அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.இந்தப்படத்தை இயக்கி இருக்கிற இயக்குநருக்கும் பணியாற்றியிருக்கின்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தத் திரைப்படம் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில்….

நிறைய மேடைகளில் ஏறி இருக்கிறேன்.இது எனக்கு ஸ்பெஷலான மேடை.படைப்பாளிகளை நான் இரண்டுவிதமாகப் பார்க்கிறேன்.சமூகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்த படைப்பை வழங்குபவர்கள் ஒருவகை.இந்தச் சமூகத்திற்குத் தேவையான படைப்பைக் கொடுப்பவர்கள் மற்றொரு வகை.இது சமூகத்திற்கு தேவையான படைப்பு. 
இப்போது இருக்கும் சூழலில் மருத்துவம் போல் படைப்புகள் எப்பவாவது வரும்.இதனை அப்படிப்பட்டதொரு படைப்பாகத்தான் பார்க்கிறேன்.இந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் விஜயகுமாருக்கு மனமார்ந்த நன்றி. 
பரபரப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு போன்கால் வந்தது.முத்தரசன் என்ற பெயரைச் சொன்னவுடன் எதுவும் பேசாமல் வாருங்கள், படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வோம் என்று கூறினேன்.இது சிவப்பு வண்ணத் துண்டிற்கு நான் கொடுக்கும் மரியாதை.‌இந்த சிவப்புத்துண்டில் அனைத்தும் அடங்கும் பேரன்பு இருக்கும். பெரும் கருணை இருக்கும் பெரும் கோபம் இருக்கும் மக்களுக்கான அர்ப்பணிப்பு இருக்கும் இப்படித்தான் நான் சிவப்பு வண்ணத்தைப் பார்க்கிறேன்.‌அவருடன் நிற்கும்போது அவருடன் பணியாற்றும்போது..இப்படி எல்லாம் கூட மனிதர்கள் இருக்கிறார்களா..என்ற ஆச்சரியத்தையும் வியப்பையும் கொடுத்தார்.அவரை நான் அப்பா என்றுதான் அழைப்பேன்.மிக்க மகிழ்ச்சி. 
அவருக்குத் துணையாக ஒரு பெண்மணி நடித்தார்.அவரது பெயர் ரஷ்யா என்றார்கள்.அதுவும் எனக்கு வியப்பாக இருந்தது.அவரிடம் கேட்டபோது எங்கள் ஊரில் நிறையப் பேருக்கு அவருடைய பெயருக்கு முன்னால் ரஷ்யா இருக்கும் என்றார்.‌
இப்படி இந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் பேரன்பு கொண்டவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து உருவாக்கிய படைப்புதான் இது.‌
இனி வரும்காலங்களில் உணவுக்காகத்தான் சண்டை.காசு பணத்திற்காக அல்ல.நல்ல உணவை வைத்திருப்பவன் பெரும் செல்வந்தனாக இருப்பான்.பணக்காரன் வேறு.செல்வந்தன் வேறு. 
நல்ல காற்று நல்ல குடிநீர் நல்ல உணவு வைத்திருப்பவன்தான் செல்வந்தன்.இதை நோக்கித்தான் இந்தச் சமூகம் ஓடும் அவரிடம் சென்றுதான் கைகட்டி நிற்கவேண்டும்.அந்தச் சூழல்தான் வரப்போகிறது.இதற்கு முந்தைய தலைமுறை பாதுகாத்துக் கொடுத்த இயற்கை வளங்களை நாம் பத்திரமாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தவேண்டும்.அந்தப் பொறுப்பு நமக்கு நிறைய இருக்கிறது.அப்படிப்பட்ட பொறுப்புடன் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அரிசி.இது அடுத்த தலைமுறையினருக்கு பெரிய ஆவணமாக இருக்கும்.காலம் காலமாக பேசப்படும்.இதை அனைவரும் திரையரங்கத்திற்குச் சென்று பார்த்து நல்ல ஒரு அங்கீகாரம் கொடுத்தீர்கள் என்றால் இதுபோன்ற நல்லதொரு படைப்பு உங்களைத் தேடிவரும். வெல்வோம் என்றார். 

இயக்குநர் விஜயகுமார் பேசுகையில்….

இந்தப்படம் நீண்டகால ப்ராஜெக்ட்.இதை கஷ்டப்பட்டு உருவாக்கினோம் என்பது அனைவருக்கும் தெரியும்.இதற்கு உதவி செய்த தயாரிப்பாளர்கள் சண்முகம் – பிரபாகரன் – மகேந்திரன்- ஆகியோருக்கு நன்றி.இந்தவிழா இந்த அளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.இது நடைபெற்றதற்கு இறைவனுக்கு நான் நன்றி சொல்கிறேன். 
இதில் நடித்த இரா முத்தரசன்,சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி. 
இந்தப்படம் ஒரு உணர்வுபூர்வமான படமாக இருக்கும்.இந்தப்படம் எனக்கு மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. 
நாங்கள் நெய்குப்பை எனும் கிராமத்திற்குச் சென்றபோது கிடைத்த அனுபவத்தால்தான் இந்தப்படம் உருவானது என்றார். 

தயாரிப்பாளர் சண்முகம் பேசுகையில்…..

இந்தப்படத்தின் கதையை இயக்குநர் விஜயகுமார் என்னிடம் சொல்லி முதலில் ஒரு மேக்கிங் வீடியோ செய்ய வேண்டும் என்றுதான் சொன்னார்.அதற்கு எவ்வளவு செலவாகும்? என்று கேட்டேன். ஒரு தொகையைச் சொன்னார். அதைக் கொடுத்தேன்.அதன்பிறகு முத்தரசன் அவர்களைச் சந்தித்து அவருடைய ஒப்புதலுடன் மேக்கிங் வீடியோவை உருவாக்கினோம்.‌இதைப்பார்த்த பிறகு இதை இன்னும் விரிவுபடுத்தலாம் என்று சொல்லி பேசி பேசி இவ்வளவு பெரியபடமாக உருவாகி இருக்கிறது.இது இவ்வளவு பெரியபடமாக வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார். 

இரா.முத்தரசன் பேசுகையில்….

இயக்குநர் விஜயகுமாரும் இளங்கோவும் முதலில் என்னைச் சந்தித்து விவசாயம் தொடர்பான ஆவணப்படம் ஒன்று உருவாக்குகிறோம்.அதில் நீங்கள் இரண்டுநாட்கள் நடிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.நான் உடனடியாக கையைக் கூப்பி நான் வரமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன்.அதன்பிறகு கதையைச் சொன்னார்‌. கதை எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.கிராமத்திற்குச் சென்று படப்பிடிப்பு நடத்துங்கள்.எங்களுடைய தோழர்கள் உங்களுக்கு உதவிபுரிவார்கள் என்று சொன்னேன்.
இயக்குநர் விஜயகுமார் மிகப்பெரிய கெட்டிக்காரர்.சாதிக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர். 
அதன்பிறகு இதுகுறித்து தோழர் வீரபாண்டியனிடம் விவாதித்தேன்.ஆவணப்படத்தில் இரண்டுநாட்கள் நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று சொன்னேன்.இதைக்கேட்டதும் வீரபாண்டியன் இது ஒன்றும் தப்பில்லை தாராளமாக நடிக்கலாம்.அதை விருதிற்காக அனுப்புவார்கள் என்றார். 
அதன்பிறகு தோழர் பெரியசாமி இடமும் இதைப்பற்றிச் சொன்னபோது அவரும் நடிக்கலாம் என்று சொன்னார். 
அதன்பிறகு இரண்டுநாள் என்பதை மூன்றுநாளாக நான் கணக்கிட்டு படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றேன்.எனக்கு அப்போது ஆவணப்படம் என்றால் என்ன? நீண்டபடம் என்றால் என்ன? எதுவும் தெரியாது.படப்பிடிப்புத் தளத்தில் வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. 
அதன்பிறகு உங்களுக்கு எப்போது ஓய்வுநேரம் கிடைக்கிறதோ அப்போது சொல்லுங்கள் படப்பிடிப்பு நடத்தலாம் என மெதுவாக இயக்குநர் சொன்னார். 
அதன்பிறகு 40 நாட்கள் ஆனது.அதன்பிறகு உங்களுடன் சமுத்திரக்கனியையும் சேர்த்து நடிக்க வைக்கவேண்டும் என்று சொன்னார்.அப்போது என்னுடன் சமுத்திரக்கனி நடிக்கவில்லை.சமுத்திரக்கனியுடன் நான் நடிக்கிறேன் என்று சொன்னேன்.‌
இது என்ன ஆனது என்றால் அரசியலை விட்டு நான் சினிமாவுக்கு சென்றுவிட்டேனோ..என்ற நிலை உருவாகிவிட்டது.ஆனால் உண்மையைச் சொல்கிறேன்.இது ஒரு விபத்து போன்றதுதான்.என்னுடைய முழுநேரமும் அரசியல்தான்.அதை இங்கு தெளிவுபடுத்துகிறேன். 
விரைவில் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகும்.அனைவரும் பார்க்கவேண்டும்.படம் எப்படி என்பதை உங்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறேன். 
என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வருகைதந்த அனைவருக்கும் நன்றி.இப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நெய்குப்பை கிராம மக்களுக்கும் நன்றி

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response