மாவீரர் நினைவாக மரநடுகை – யாழில் திருமாவளவன் தொடங்கி வைத்தார்

தமிழீழத்தில் கார்த்திகை மாதத்தை மாவீரர் மாதமாகக் கடைபிடித்து வருகிறார்கள். இதையொட்டி வடமாகாண அரசில் அமைச்சராக இருந்த போதே, மாவீரர் மாதத்தை மரநடுகை மாதமாக அறிவித்து செயல்படுத்தினார் பொ.ஐங்கரநேசன்.

இப்போது அரசு இல்லாவிட்டாலும் அவ்வழக்கத்தை விட்டுவிடாமல் தனது தலைமையில் இயங்கும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சார்பாக மரநடுகை மாத நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் பொ.ஐங்கரநேசன்.

அந்நிகழ்ச்சி 10.11.2018 (சனிக்கிழமை) அன்று கோலாகலமாக நிகழ்ந்தேறியது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

முதல் நிகழ்ச்சியாக, யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தில் மரநடுகை இடம்பெற்றது.

தொடர்ந்து, நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி திறந்துவைக்கப்பட்டு விருந்தினர் உரைகளும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சியில் ஐம்பது மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தங்கள் சட்டைப் பைகளில் தமிழீழ தேசிய மலரான காந்தள் மலரை அணிந்திருந்த புகைப்படம் மேலே இடம்பெற்றிருக்கிறது.

Leave a Response