மனிதி எனும் அமைப்பு பெண்களை ஒருங்கிணைக்கவும், பெண்களது பிரச்சனைகளைப் பற்றிப் பேசவும், போராடவும், அதற்கான தீர்வுகளைப் பெறவும், சமத்துவமான சமுகத்தை உருவாக்கவும் பெண்களால் ஆரம்பிக்கப் பட்ட அமைப்பு. கடந்த இரண்டு வருடங்களாக மனிதி அமைப்பு இயங்கி வருகிறது.
பெண்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிப்பதும், சமத்துவமான சமூகத்தை அமைப்பதும் அவசியம். அதற்கான அனைத்து வழிமுறைகளையும் மனிதி மேற்கொள்ளும். எத்தனை தடைகள் வந்தாலும் சமத்துவ சமூகத்தை நோக்கிய மனிதியின் பயணம் தொடரும் என்கிற உறுதியுடன் செயல்படும் அவ்வமைப்பு அக்டோபர் 18, 2018 அன்று சபரிமலைக்குச் செல்லும் பயணத்தை அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து எழுத்தாளர் நலங்கிள்ளி எழுதியுள்ள பதிவில்,
ஐயப்பன் வழிபாட்டுப் பயணம் முன்னெடுக்கும் மனிதி முயற்சிக்கு ஆதரவு தருவோம்!
பெண் மாதாமாதம் கருமுட்டை வெளியேற்றுகிறாள். எனவே தீட்டானவள். எனவே அவள் மதப் புனிதத்திலிருந்து ஒதுங்கியிருத்தல் வேண்டும் எனத்தான் கிறித்துவம், இஸ்லாம், இந்து சமயங்கள் போதிக்கின்றன. இந்த மதங்களின் வெற்றி எதில் அடங்கியுள்ளது என்றால், அந்தத் தீட்டுக் கற்பிதத்தைப் பெண்களையே நம்ப வைத்ததுதான். பெண்களுக்கேனும் மாதம் ஒருமுறைதான் இனப்பெருக்க முட்டை வெளியேறுகிறது. ஆனால் ஆண்களுக்கோ எந்நேரமும் எப்போது வேண்டுமானாலும் இனப்பெருக்க விந்து வெளியேறலாம். முட்டை தீட்டு, விந்து புனிதம் என்பது என்ன வகை தர்க்கம்? இதை நாம் பெண்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
தர்க்காவில் பெண்களுக்கு உரிமை கேட்பீர்களா என்கிறார் கட்ஜு. கிறித்துவத்தின் உயர் பீடங்களில் பெண்களுக்கு இடம் கேட்பீர்களா என்ற வினாக்களும் வந்த வண்ணமுள்ளன. ஆம், பெண்ணைத் தீட்டாக்கும் எந்த மதத்தின் ஆணாதிக்கக் கருத்தியலையும் நாம் எதிர்க்கிறோம். இன்று ஐயப்பன் தீர்ப்பு ஓர் உடைப்பு என நாம் கருதுகிறோம்.
இந்த உடைப்பு பெரிதாகி மடை வெள்ளமென இனி பெண்கள் ஐயப்பன் வழிபாட்டுக்குச் செல்ல வேண்டும். ஏனென்றால் வீட்டில் விரதமிருக்கும் கணவனுக்கு எல்லா உதவிகளும் செய்து இன்னும் பெரிதும் விரதம் காத்து வந்திருப்பவர்கள் பெண்களே. ஆனால் அந்தப் பெண்களைக் கொண்டே ஐயப்ப வழிபாட்டுக்கு எதிர்ப்பை உருவாக்கும் நரித் தந்திர வேலையில் இறங்கியுள்ளன இந்துத்துவ ஆற்றல்கள். பெண்களை வைத்தே பெண்களைத் தீட்டானவர்கள் எனச் சொல்ல வைப்பதைப் போன்ற அசிங்கம் ஏதுமில்லை. இந்தத் தந்திரம் உடைக்கவே இப்போது மனிதி அமைப்பு இந்த ஐயப்பன் வழிபாட்டுப் பயணம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
நாத்திகர்ளாகிய நாம் இதைச் செய்யலாமா என்ற கேள்வி எழலாம். ஆலய நுழைவுப் போராட்டங்கள் செய்தோரில் நாத்திகர்களும் உண்டு. நாம் பேசுவது மொட்டை நாத்திகம் அல்ல. ஏதோ, தீர்ப்பு வந்து விட்டது, இனி பெண்களாகப் பார்த்துப் போய்க் கொள்வார்கள் எனக் காத்திருக்க முடியாது. ஏனென்றால் பிற்போக்கு ஆற்றல்கள் பெண்களின் ஐயப்ப வழிபாட்டுக்கு எதிராக ஏற்கெனவே இயங்கத் தொடங்கி விட்டன. எனவே முற்போக்காளர்களாகிய நாமும் நம் கடமையைச் செய்ய வேண்டும்.
அனைத்துச் சாதியினர் கோயில் நுழைவு போன்று இது அவ்வளவு எளிதன்று. ஏனென்றால் அந்த உரிமை கிடைத்ததும் உள்ளே நுழைவதற்கு அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டிய தேவையேதும் அப்போது ஏற்படவில்லை. ஆனால் பெண்களைப் பொறுத்த வரை அவர்களின் அடிமைத்தனம் மிகவும் ஆழமானது. அவர்களின் உடலோடு நடக்கும் இயற்கைச் செயற்பாட்டைக் கொண்டே அவர்களை அசிங்கப்படுத்தி வைத்திருக்கும் பண்பாட்டுக் கொடுமை நடைபெறுகிறது. எனவே ஒன்று ஐயப்பன் வழிபாட்டு உரிமை, இன்னொன்று தீட்டு விடுதலை என்ற இரு வழிகளில் இந்தப் பரப்புரை நடைபெற்றாக வேண்டும்.
இதற்குக் கட்டாயம் மனிதியின் முயற்சி ஓர் தொடக்கப் புள்ளியாக அமையும் என நம்புகிறேன். பயணம் வெல்ல வாழ்த்துக்கள் மனிதிகளே!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெண்களின் இந்த அதிரடிப் பயணம் பரபரப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.