கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள புகழ் பெற்ற அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.
நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வந்த இந்த வழக்கத்துக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
அந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று 2018 செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பு கூறியது.
இந்தத் தீர்ப்பை பல்வேறு மகளிர் அமைப்புகள் வரவேற்ற போதிலும், இந்து அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் தொடர்ந்து, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்ற பல பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதற்கிடையே, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்து வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் 56 மறுஆய்வு மனுக்கள், 4 ‘ரிட்’ மனுக்கள் மற்றும் 5 இடமாற்ற மனுக்கள் என மொத்தம் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களின் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், ரோகின்டன் பாலி நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்றது.
பொதுவாக உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகளின் அறையில் நடைபெறும். மனுதாரர்களோ அல்லது அவர்களின் வழக்குரைஞர்களோ விசாரணையின் போது அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் விதிவிலக்காக இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதியின் தலைமையில் திறந்த அமர்வில் அனைவர் முன்னிலையிலும் விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் போது பல்வேறு மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் கே.பராசரன், வி.கிரி, அபிஷேக் மனு சிங்வி, சேகர் நாப்டே, கே.ஆர்.வெங்கட்ரமணி, கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் வாதாடினார்கள். கேரள அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா வாதாடினார்.
இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அரசியல் சாசன அமர்வு தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்தநிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், ரோகின்டன் பாலி நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகிய 3 நீதிபதிகள் இந்த வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி தீர்ப்பு வழங்கினார்கள்.
ரோகின்டன் பாலி நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய இரு நீதிபதிகள், சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லும் என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
பெருவாரியாக 3 நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒரு வழிபாட்டு தலத்தில் பெண்களுக்கு அனுமதி மறுப்பதற்கு எதிராக அரசியல் சட்டத்தின் அடிப்படையில் கேள்வி எழுப்புவது என்பது இந்த வழக்கில் மட்டுமின்றி தர்கா, மசூதி ஆகியவற்றில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது தொடர்பான விவகாரத்திலும் உள்ளது.
பார்சி சமூகத்தில் வேறு இனத்தவரை திருமணம் செய்துகொண்ட பெண்களுக்கு அவர்களின் கோவில்கள் மற்றும் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதி மறுப்பது என்ற பார்சி மத நம்பிக்கையின் அடிப்படையிலும் இந்த கேள்வி தொடருகிறது.
இதேபோல் தாவூதி போரா சமூகத்தில் நிலவும் பெண்கள் தொடர்பான நடைமுறை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
அந்த மனுக்களில் எழுப்பப்பட்டுள்ள அடிப்படை கேள்விகளுக்கும் சபரிமலை தொடர்பான இந்த மறுஆய்வு மனுக்களில் எழுப்பப்பட்டுள்ள அடிப்படை விஷயங்களுக்கும் தொடர்பு உள்ளது.
மதத்தின் அடிப்படையிலான பிரிக்க முடியாத விஷயங்களை அரசியல் சட்டத்தினால் அமைக்கப்பட்ட நீதிமன்றம் தீர்மானிப்பதற்கான அதிகாரம் உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.
எனவே அரசியல் சட்டப்பிரிவுகள் 25 மற்றும் 26-ன் அடிப்படையில் வழங்கப்படும் உரிமைகள் குறித்து முடிவெடுக்கும் வகையில் இந்த மனுக்கள் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுகிறது.
சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம் உள்ளிட்ட மதத்தின் அடிப்படையிலான நடைமுறைகள் பற்றி 7 நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரிக்கும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்கு உட்பட்டு அமைக்கப்படும் இந்த 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு மதத்தின் அடிப்படையிலான வழக்கங்கள், நடைமுறைகள் பற்றி ஒரு சட்டரீதியான கொள்கையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கருத்தில் கொள்ள வேண்டிய 7 அடிப்படையான அம்சங்கள் பற்றியும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதித்து கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் மறுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து அவர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.
3 நீதிபதிகள் வழங்கி உள்ள பெரும்பான்மை தீர்ப்பில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு விசாரணையை மாற்றி உத்தரவிடப்பட்டு இருக்கிறது. என்றாலும் அந்த 3 நீதிபதிகளும், சபரிமலை கோவிலில் பெண்கள் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, இந்த மறு ஆய்வு மனுக்களை விசாரிக்கும். 7 நீதிபதிகளும் விசாரித்து முடித்து தீர்ப்பு வழங்கும் வரை சபரிமலையில் பெண்களின் வழிபாட்டுக்கு தடை எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய பல பெண்கள் தயாராகிவருகிறார்கள்.