மு.க.ஸ்டாலின் இவ்வளவு சிறப்புகள் உடையவரா? – வியக்கும் இளையதலைமுறை

திமுக தலைவர் கலைஞர்கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ( ஆகஸ்ட் 28) நடைபெற்றது.

இதில், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர்
க.அன்பழகன் இதனை அறிவித்தார்.

இதையடுத்து, மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதுமட்டுமல்லாமல், தனித் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற முதுமொழிக்கு ஏற்ப, 1966-ல் கோபாலபுரம் இளைஞர் திமுக என்று, தனது சீரிளமையில் 13 ஆவது வயதிலேயே, திமுகவில் வாலிபத் துடிப்புடன் தீவிரமாகச் செயல்படத் தொடங்கிய மு.க.ஸ்டாலின், அண்ணா, கருணாநிதி ஆகியோருக்குப் பிறகு, திமுக சரித்திரத்தின் மூன்றாவது பாகத்தை எழுதி முன்னெடுத்துச் செல்லப் போகிறார் என்பதற்கான மின்னும் அடையாளமாகத் திகழ்ந்தார்.

தொடர்ந்து, 1974-ல் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, பிறகு நிர்வாகக்குழு உறுப்பினர், இளைஞர் அணி அமைப்பாளர், செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என்று திமுகவின் பல்வேறு பொறுப்புகளைப் படிப்படியாக வகித்து, தனது ஓயாத உழைப்பாலும் கொள்கை உறுதியாலும் வழிகாட்டும் ஒளிவிளக்காய் உருப்பெற்றிருக்கிறார்.

அண்ணா, கருணாநிதி, க.அன்பழகன் ஆகியோரின் அடியொற்றி நடையாய் நடந்து நற்றமிழர் யாவரும் ஒரு முகமாக உவந்து போற்ற, கழகப் பணியாற்றி, திராவிடப் பேரியக்கக் கொள்கைகளை, ஆக்கப்பூர்வமான அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, காலம் கனிந்து நமக்களித்திருக்கும் லட்சியக் கொடை மு.க.ஸ்டாலின் என்பதையும், தந்தை மகற்காற்றிய நன்றியினால், மகன் தந்தைக் காற்றும் பேருதவியாக, கண்ணயரா கடின உழைப்பின் மூலம் தகுதிகள் பல பெற்று, விட்ட இடத்தைத் தொட்டுத் துலங்கிடச் செய்து, திமுகவை முற்போக்கு நோக்கில் எடுத்துச் செல்லும் முழுமையான ஆற்றலாளர் மு.க.ஸ்டாலின் என்பதையும் பொதுக்குழு பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.

நெருக்கடி நிலையை எதிர்த்து 01.02.1976 அன்று கைதாகி ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஏறக்குறைய ஓராண்டுக் காலம் சிறைக் கொட்டடியில் கடும் சித்திரவதைக்குள்ளாகி செத்தொழிந்தான் இவன் என்று எறியப்பட்டிருந்தபோது, சிட்டிபாபு தன்னுயிரை ஈந்து காப்பாற்றியதால் நம்மிடையே இன்று உயிரோடு நடமாடும் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களின் நலனுக்காக சமூகநீதியை நிலைநாட்டிட, 69 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என்று, 1994-ல் அறிவிக்கப்பட்ட போராட்டம் உள்பட திமுக அறிவித்த அனைத்து அறப்போராட்டங்களிலும் ஆர்வமுடன் பங்கேற்றுக் கைதானவர், மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, எமை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை எனும் சிந்தையினர்.

மு.க.ஸ்டாலின் ஆறு முறை சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 24 வருடங்களுக்கும் மேல் சட்டப்பேரவை ஜனநாயகப் பணியைத் திறம்பட ஆற்றி வரும் அவர், விரைவில் சட்டப்பேரவைப் பணியில் வெள்ளி விழா காணவிருக்கிறார்.

ஸ்டாலின் மிகவும் புத்திசாலி மற்றும் திறமையானவர்; தந்தையைப் போல் வெற்றி பெறுவார் என்று அண்ணாவின் அன்பான வாழ்த்தைப் பெற்றவர்.

5.03.2015 அன்று நடைபெற்ற திமுக தலைமைச் செயற்குழுவில் கழகத்தின் வருங்காலமே என்றுகருணாநிதியால் அடையாளம் காட்டப்பட்டவர்; உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று கருணாநிதியால் உளமுருகச் சான்றிதழ் தரப்பட்டவர். ஸ்டாலின் கழகத்திற்கு மட்டும் தளபதி அல்ல. வருங்காலத்தில் ஒட்டு மொத்த தமிழினத்தின் தளபதியாக வருவார் என்று பாராட்டிய க.அன்பழகன் 02.2012 அன்று நடைபெற்ற பொதுக் குழுவில், ஸ்டாலின்தான் எதிர்காலத்திலே திமுகவின் தலைமையாக இருப்பார் என அடையாளம் காட்டுகிறோம் என அன்புடன் சுட்டிக்காட்டப்பட்டவர்.

மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக, அமைச்சராக, தமிழகத்தின் துணை முதல்வராகப் பொறுப்பு வகித்து, நிர்வாக ஏணியிலும் படிப்படியாக அளந்து அடியெடுத்து வைத்து ஆரவாரமின்றி, அமைதியாக மேலேறி, அருமையாகப் பக்குவப்பட்டிருப்பவர். உங்களுக்காக நான்; உங்களால் நான்; உங்களில் ஒருவன் என்ற லட்சியத்துடனும், தகுதிகளால் வளர்ந்து தன்னடக்கத்துடனும் இருப்பவர்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக புதிய தொழிற்சாலைகள், உட்கட்டமைப்புத் திட்டங்கள், தகவல் தொழில்நுட்பத் திட்டங்கள் உள்ளிட்டவற்றையும்,பெரியார் நினைவு சமத்துவபுரங்களையும், கிராமப்புற வளர்ச்சிக்கான நமக்கு நாமே திட்டத்தையும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களையும், உள்ளாட்சியில் நல்லாட்சிக்கான உயர்ந்த திட்டங்களையும் குறைவற நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின், தனது அரசியல் நெடும் பயணத்தில் பொன் விழா கண்டவர்.

கருணாநிதி, க.அன்பழகன் ஆகியோரால் மனநிறைவுடன் அடையாளம் காட்டப்பட்டிருக்கும், தகுதிகள் பல பெற்று நிறைகுடமாகத் திகழும் மு.க.ஸ்டாலின், திமுகவின் தலைவராக, பொதுக் குழுவினால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்நாள், திமுகவின் அனைத்து நிலைகளிலும் உள்ள தொண்டர்கள் எல்லோருக்கும் இன்ப நாளிதே; இதயம் பாடுதே என்பதற்கு இணையானதாகும். இந்தநாள், திமுக வரலாற்றின் மூன்றாம் பாகத்திற்கான முகவுரையாகும். இந்த முகவுரையின் மூலவர்களான திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் உளப்பூர்வமான நன்றிக்குரியவர்கள்.

அரை நூற்றாண்டுக் காலம் கழகத்திற்குத் தலைமையேற்று வழிநடத்திச் சென்ற கருணாநிதி, இயற்கை எய்தியிருப்பது, நமக்கு இமயம் சரிந்து, இதயம் சாய்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும். அதனால், சோகமும் துயரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், திராவிட இயக்கத்தின் பாரம்பரியமான பரம வைரிகள் சரியான சமயமடா இது என்று சூதுவலை பின்னுவது, புதியதல்ல; நம்மை ஆதிகாலம் தொட்டு ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து வரும் சூழ்ச்சியை சுக்குநூறாக்கி, மேலெழுந்து முன்னேற்றப் பாதையில் முனைப்போடு நடைபோட்டு வருகிறோம்.

கோடி சூரியப் பிரகாசம் குறைந்து விட்டாலும், இதோ நானிருக்கிறேன் என்று உதய சூரியனாய் ஒளிக்கதிர்களைப் பரப்பி, திமுகவைக் கட்டிக்காத்து, தொண்டர்களையும், தமிழகத்தையும் வழி நடத்தவும், வாழ்விக்கவும் வந்தமைந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவரே நமக்குக் கதி; இனி வருங்காலம் முழுதும் அவரே நமது வீட்டுக்கு விளக்கு; நாட்டுக்கு நல்லதம்பி. எனவே, திமுகவின் ஒரு கோடி தொண்டர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் அண்ணா காட்டிய பாதையில், கருணாநிதி வகுத்த பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள, எமக்குத் துணிவையும் கனிவையும், ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தருக என விண்ணதிர முழங்கிடுவோம்.

ஒரு தாய் மக்களான நாமனைவரும், அர்ஜுனனின் கூரிய குவிமைய நோக்குடன் பயணிப்போம்; கவனம் சிதையாது, காரியம் சாதிப்போம்; அராஜக அதிமுக ஆட்சியை அப்புறப்படுத்துவோம்; மு.க.ஸ்டாலினை முதல்வராக அரியணையில் அமர்த்துவோம். தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் மீண்டும் செலுத்துவோம். இன – மொழி பெருமையைப் பேணுவோம். அதுவரை மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது அயராதுழைப்போம்; அதற்கான சூளுரையை மேற்கொள்ள வேண்டும்” என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் மூலம் மு.க.ஸ்டாலின் ஐம்பத்து இரண்டு ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் இருப்பவர், கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து வளர்ந்தவர், பல முறை சிறை சென்றவர் ஆகிய செய்திகளை அறிந்த இளைய தலைமுறை, ஸ்டாலின் இவ்வளவு சிறப்புகளுக்குச் சொந்தக்காரரா? என்று வியப்படைகிறார்கள்.

Leave a Response