
ரஷ்யாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அர்ஜெண்டினா அணியின் முதல் போட்டியில் உலக நாயகன், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 64வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை நேராக் கோல் கீப்பர் கையில் அடிக்க, ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டம் 1-1 என்று ட்ரா ஆனது.
தங்கள் முதல் உலகக்கோப்பை போட்டியில் மிகப்பெரிய அணிக்கு எதிராக 1-1 ட்ரா, கோல் கீப்பர் ஹால்டர்சன் மெஸ்ஸியின் பெனால்டி ஷாட்டைத் தடுத்து நிறுத்தியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது அர்ஜெண்டினா, மெஸ்ஸி ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று இன்னொரு நட்சத்திரமான போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அற்புதமான ஆட்டத்தினால் ஸ்பெயின் வாயிலிருந்து வெற்றியைப் பறித்து வந்து ஹாட்ரிக்குடன் 3-3 என்று ட்ரா செய்ய இன்றோ இன்னொரு உலக நாயகன் மெஸ்ஸி பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டது பெரிய விவாதமாகியிருக்கிறது.


