+1 பொதுத்தேர்வு 188 அரசுப்பள்ளிகள் 100 % தேர்ச்சி

பிளஸ் 1 எனப்படும் பதினோராம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வெழுதினர்.

தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. விடைத்தாள் மதிப்பீட்டுப்பணியும் அதைத்தொடர்ந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியும் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், ஏற்கெனவே, அறிவிக்கப்பட்டபடி, பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில வினாடிகளில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது அவர்கள் அளித்திருந்த செல் போன் எண்ணுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாக அனுப்பப்பட்டது.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 16-ம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவின்போதும், 23-ம் தேதி வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவின்போதும் ரேங்க் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதேபோல, இன்று வெளியான பிளஸ் 1 தேர்வு முடிவிலும் ரேங்க் பட்டியல் வெளியிடப்படவில்லை.

8 லட்சத்து 63 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதியதில் 91.3% பேர் மொத்தம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.4% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.6% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 83.9% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2,724 அரசுப் பள்ளிகளில் 188 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

Leave a Response