விவேக்கை ஓங்கி அறைந்த நடிகர்– பாலக்காட்டுமாதவன் படப்பிடிப்பில் பரபரப்பு.

அமீரின் யோகி படத்தில்  நடிக்கத்தொடங்கிய பத்திரிகையாளர் தேவராஜ், இதுவரை, 35 படங்களில் நடித்திருக்கிறார், விரைவில் வெளியாகவிருக்கும் விவேக் கதாநாயகனாக நடித்திருக்கும் பாலக்காட்டுமாதவன் படத்தில் விவேக்குடன் இணைந்து நடித்த அனுபவங்களைக் கூறுகிறார்.

எம்.சந்திரமோகன் இயக்கும் ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தில், விவேக்குடன் இணைந்து நடிக்க என்னைத் தேடி வாய்ப்பு வந்தபோது, உடனே ஒப்புக்கொண்டேன். இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு. ஈ.சி.ஆர் ரோட்டில், வி.ஜி.பிக்கு அருகிலுள்ள ஜூஹ¨ பீச்சில் இருந்த பிரமாண்ட பங்களாவில் நடந்த படப்பிடிப்புக்குச் சென்றேன். ”இதுதான் உங்கள் வீடு. நீங்கள் ஆளுங்கட்சி மினிஸ்டர், சுனாமி சுந்தரம்” என்று, வசனகர்த்தாவும், பாண்டியராஜன் நடித்த ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ படத்தை இயக்கியவரும், நடிகருமான அருமை நண்பர் ஏ.ராஜகோபால் சொன்னார்.

நீச்சல் குளத்துடன் கூடிய அந்த பங்களாவை வியப்புடன் சுற்றிப் பார்த்தேன். பிறகு படப்பிடிப்புக்கு தயாரானேன். எனது உதவியாளர்களாக சீனியர் நடிகர் பாண்டு, ஏ.ராஜகோபால் நடித்தனர். முதல் காட்சி, வீட்டுக்குள் நுழைவேன். ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்றபடி நுழையும் என்னைப் பார்த்து விவேக் ஒரு கமெண்ட் அடிப்பார். அவர் யார்? எதற்கு என் வீட்டுக்கு வந்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது என்பதால் கடுப்பான நான், ”யார்ரா நீ?” என்று, பளாரென்று அவரது இடது கன்னத்தில் அறைவேன்! அவ்வளவுதான், ஆடிப்போய் விடுவார் விவேக்.

கன்னத்தைத் தடவியபடி, வலியைத் தாங்கியபடி என்னைப் பார்த்து புலம்புவார். அப்போது பாண்டு, ”ஆங்… இவருதான் மினிஸ்டரு” என்று சொன்னவுடன் விவேக் என்னைப் பார்த்து பயந்து, அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்வார்.

இந்தக் காட்சியை எம்.சந்திரமோகன் இயக்க, கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்தார். இயக்குனர் சொன்னவுடன் நடிக்க ஆரம்பித்தேன். என் பலம் முழுவதையும் வலது கையில் திரட்டி, விவேக்கின் இடது கன்னத்தில் பளாரென்று அறைந்து, ஒரே டேக்கில் நடித்தேன். அய்யகோ… விவேக்கின் கன்னத்தில் நிஜமாகவே அடி விழுந்தது!

டேக் ஓ.கே ஆனவுடன் சிரித்தபடி வந்த விவேக், ”என்ன தேவராஜ்… இத்தனை வருஷமா என்மேல் இருந்த கோபத்தை இப்படி ஒரே அறையில் தீர்த்துக்கிட்டீங்களா?” என்று, வழக்கமான தொனியில் என்னைக் கிண்டலடித்தார். உண்மையிலேயே எனக்கு ஒருமாதிரியாகி விட்டது.

விவேக் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர். ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘ஜனங்களின் கலைஞன்’ என்றும் ரசிகர்களால் பாராட்டப்படுபவர். இந்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது பெற்றவர். அவரது சினிமா அனுபவம் என்ன, என் சினிமா அனுபவம் என்ன? அவர் நினைத்திருந்தால், புதுமுக நடிகனான என்னிடம் அவர் அடி வாங்காதது போல், இயக்குனரிடம் சொல்லி காட்சியை மாற்றியமைத்து இருக்கலாம். ஆனால், சினிமாவை நேசிக்கும் உண்மையான கலைஞனான அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக, ஒரே டேக்கில் நடித்தற்காக என்னைப் பாராட்டினார்!

மதிய உணவு இடைவேளையில் விவேக், பாண்டு, ஏ.ராஜகோபால், எம்.சந்திரமோகன், கே.எஸ்.செல்வராஜ் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பாண்டு என்னிடம் சொன்னார், ”ஆங்… என்ன இப்படி திடுதிப்புன்னு விவேக் சாரை அடிச்சிட்டீங்க… கூட நடிச்ச நானே பதறிப் போயிட்டேன். எவ்ளோ பெரிய காமெடி ஆர்ட்டிஸ்ட்… நம்மளை சுற்றி எவ்ளோ பேர் நின்னுகிட்டு இருக்காங்க. எல்லாத்தையும் மறந்து, டைரக்டர் சொன்னதை அப்படியே செய்துட்டீங்களே” என்று பேசிக்கொண்டே போக, அதை ரசித்த விவேக், ”தயங்காம நடிக்கணும் தேவராஜ்” என்றார்.

”25 வருஷ நண்பர். முதல்முறையா உங்க கூட சேர்ந்து நடிக்கிறேன். அதுவும் முதல் ஷாட்டே… நான் உங்க கன்னத்துல அடிக்கிற மாதிரி” என்று நான் இழுக்க, ”டோன்ட் வொர்ரி தேவராஜ்… இதுதான் சினிமா” என்று சிரித்தார் விவேக். சமீபத்தில் எங்கள் சம்பந்தப்பட்ட காட்சிக்கு, பிரசாத் ஸ்டுடியோவிலுள்ள தியேட்டரில் டப்பிங் பேசினோம். ஓரிரு நாட்களுக்கு முன் விவேக்கிடம் பேசியபோது, ”தேவராஜ்… நம்ம சீனை பார்த்தேன். பிரமாதமா வந்திருக்கு. அதுவும் ஒரு காட்சியில், ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு, ‘சாப்பிட்டியா?’ன்னு கேட்ட ஆளு நீங்க மட்டும்தான்’னு உங்களை தொட்டுப் பார்த்துட்டு நான் சொல்வேன் பாருங்க… அய்யோ… அந்த காட்சி அள்ளிக்கிட்டு போகுது” என்றார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்தப் படத்தில் நடித்தேன். அதற்காகத்தான் தாடி எடுத்தேன். விரைவில் திரைக்கு வரவுள்ள ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தில், விவேக் ஹீரோவாக நடிக்கிறார். ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்தில் எனக்கு மகளாக நடித்திருந்த சோனியா அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். மலையாள முன்னணி நடிகை ‘செம்மீன்’ ஷீலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Leave a Response