காஞ்சனா 2 -திரைப்பட விமர்சனம்

காஞ்சனா வெற்றி பெற்றதும் அந்தப்பாணியிலேயே இந்தப்படத்தை எடுத்திருக்கிறார் ராகவாலாரன்ஸ்.
வளர்ந்து ஆளான பிறகும் பேய்க்குப் பயப்படுகிற அதே இளைஞர் ராகவாலாரன்ஸ். இரவில் சிறுநீர் கழிக்கப் போவதற்குக்கூட அம்மாவின் உதவி தேவை என்கிற முந்தையபடக்காட்சிகள் இதிலும் இருக்கின்றன. இந்தப்படத்திலும் அம்மாவாக கோவைசரளாவே நடித்திருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பதிவாளராக வேலை செய்கிறார் லாரன்ஸ். அந்தத் தொலைக்காட்சியின் தரவரிசை முதலிடத்திலிருந்து இரண்டாமிடத்துக்கு வந்துவிடுகிறது. எனவே மீண்டும் முதலிடத்துக்கு வர என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கிறார்கள். சாமி நிகழ்ச்சிகளை வைத்து போட்டித் தொலைக்காட்சி முதலிடத்துக்கு வந்துவிட்டது என்பதால் நாம் பேய் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை உருவாக்கி முதலிடத்தைப் பிடிக்கலாம் என்று அதில் பணியாற்றுகிற நாயகி டாப்ஸி சொல்கிறார்.
பேய் வருவது போன்று ஏற்பாடு செய்து ஒரு நிகழ்ச்சியை உருவாக்க நினைத்துப் போன இடத்தில் உண்மையிலேயே பேய் வந்துவிடுகிறது. அப்புறம் என்னவெல்லாம் நடக்குமோ அதுவெல்லாம் நீக்கமற நடந்திருக்கிறது.
லாரன்ஸ் அட்டாகாசமான நடனத்துடன் அறிமுகமாகிறார். அறிமுகப்பாடலில் அவருடைய சொந்தத்தம்பி எல்வின் வந்து அவருக்கு இணையாக நடனமாடுகிறார். அடுத்தடுத்த படங்களில் அவரையும் நடிகராக எதிர்பார்க்கலாம்.
பேயை நினைத்துப் பயப்படுவது அம்மாவின் இடுப்பில் ஏறி உட்காருவது, ஆக்ரோசமாகச் சண்டை போடுவது ஆகிய எல்லாவற்றையுமே சரியாகச் செய்திருக்கிறார் லாரன்ஸ். தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநராக வருகிற டாப்ஸி, தன் வேடத்துக்கேற்ப சரியாக நடித்திருக்கிறார். லாரன்ஸோடு ஒருபாடலுக்கு ஆடுகிறார். பேய் வந்ததும் அவர் பயப்படுவதும் அதை மற்றவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வதும் நன்றாக இருக்கிறது.
கடற்கரையில் எடுத்த தாலியால்தான் இந்தச்சிக்கல் என்று உடனே தெரிந்துகொண்டு அதற்கான தீர்வை நோக்கிச் சரியாக முன்னேறுகிறார். சாதாரணமாகவே பேய் பற்றிப் பயந்துகொண்டிருக்கும் ராகவாலாரன்ஸ், அந்த நிகழ்ச்சிக்கு ஒளிப்பதிவு செய்ய எப்படிச்சம்மதித்தார்? என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர் டாப்ஸியைக் காதலிக்கிறார். டாப்ஸிக்காக வருகிறார் என்று சொல்லிவிட்டார்கள்.
படப்பிடிப்புக்குப் போன இடத்தில் உடன்வருகிற மயில்சாமி, மனோபாலா, சாம்ஸ், ஸ்ரீமன் ஆகியோரை வைத்துக்கொண்டு நகைச்சுவை என்கிற பெயரில் எடுத்திருக்கும் காட்சிகள் குழந்தைகளிடத்தில் விளக்கம் சொல்லமுடியாத காட்சிகள். குழந்தைகள் விரும்பிப்பார்க்க நினைக்கிற படத்தில் இப்படிக் காட்சிகள் வைக்கலாமா என்று லாரன்ஸ் யோசித்திருக்கலாம்.
பேய்ப்படம் என்று சொல்லிவிட்டதால் சாதாரணமாக ஓரிளைஞனுக்கு வருகிற கனவுகூட பேய் வருகிற கனவாக இருக்கிறது. தான் பேயிடம் அடிவாங்கியதை மறைத்து கோவைசரளா, ரேணுகா, பாண்டு ஆகியோரையும் மாட்டிவிட்டு அடிவாங்க வைக்கிற காட்சிகள் சிரிக்கவைக்கின்றன.
காஞ்சனாவில் திருநங்கையாக சரத்குமார் அவருக்கும் அவரைச் சேர்ந்தவர்களும் அநியாயமாகக் கொல்லப்படுவது போல இந்தப்படத்தில் ஊனமுற்ற நித்யாமேனன், அவரையும் அவருடைய கணவராகப் போகிற இன்னொரு லாரன்ஸ், நித்யாவின் தோழி குடும்பம் ஒரு பாட்டி நண்பர்கள் என்று எல்லோரையும் கொன்றுபோடுகிறார்கள்.
சாமிக்கும் பேய்க்கும் எப்போதும் ஆகாது என்பதை உடைத்திருக்கிறார் லாரன்ஸ். நான் சாமிப்பேய்டா என்று சொல்லிக்கொண்டு சாமி சிலைக்குக் கீழே உட்கார்ந்திருக்கிறார். சாமியின் திரிசூலத்தையே எடுத்து இன்னொரு பேயைக் குத்திக்கொல்கிறார்.
இந்தப்படத்தில் வருவன எல்லாம் கற்பனையே மூடநம்பிக்கைகளை வளர்ப்பதற்காக அல்ல என்று சொல்லிவிட்டுப் படம் முழுக்க மூடநம்பிக்கைகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இப்படத்தின் அடுத்த பாகமும் வருமென்று சொல்லியிருக்கிறார் லாரன்ஸ்.

Leave a Response