
தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றும் தமிழ்நாட்டு அரசின் முடிவுக்குத் தன்னாட்சித் தமிழகம் கடும் கண்டனம்.
சென்னை. பிப்ரவரி 3,. 2018
புது தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் இரு கட்டிடங்களின் பெயர்களை வைகைத் தமிழ் இல்லம், பொதிகைத் தமிழ் இல்லம் என்று பெயர் மாற்றம் செய்து தமிழ்நாட்டு அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றுவோரின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழ்நாட்டு அரசாங்கம் இதற்கான அரசாணை வெளியிட்டதாக செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.
புது தில்லியில் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இல்லமாக உள்ள தமிழ்நாடு இல்லம் இரண்டு கட்டிடங்களில் இயங்குகிறது. அவற்றை புதிய தமிழ்நாடு இல்லம், பழைய தமிழ்நாடு இல்லம் என பொதுவாக மக்கள் குறிப்பிட்டுவந்தனர். இப்போது இவற்றின் பெயர்களை வைகைத் தமிழ் இல்லம், பொதிகைத் தமிழ் இல்லம் என அரசு மாற்றியிருக்கிறது.
இது வெறுமனே பெயர் மாற்றம் அல்ல. மாறாக மிகப்பெரிய வரலாற்றுத் துரோகம் ஆகும். தமிழ்நாடு, தமிழ்நாடு என்று பெயர்பெற்ற 50 ஆம் ஆண்டைக் கொண்டாடுவதாகச் சொல்லிக்கொள்ளும் அஇஅதிமுக அரசு மிகப்பெரிய வரலாற்றுப் பிழையைச் செய்திருக்கிறது.
தில்லியில் சாணக்கியபுரி பகுதியில் உள்ள தமிழ்நாடு இல்லம், மற்ற பிற மாநிலங்களின் அதிகாரபூர்வ இல்லங்களைப் போலவே மாநிலத்தின் பெயரைத் தாங்கியே இருந்துவந்தது. மகாராஷ்டிரா சதன், கேரளா ஹவுஸ், உத்தராகண்ட் பவன், ஆந்திர பிரதேஷ் பவன், அருணாச்சல் பவன், அசாம் பவன், பிஹார் பவன், கோவா சதன், ஹரியானா பவன், இமாச்சல் பவன், ஜே அண்டு கே ஹவுஸ், மேகாலயா ஹவுஸ், பாண்டிச்சேரி ஹவுஸ், நாகாலாந்து ஹவுஸ், சிக்கிம் ஹவுஸ் உள்ளிட்ட மாநில அரசுகளின் பிரதிநிதித்துவ அலுவலகங்கள் அப்பகுதியில் அமைந்துள்ளன. அவை அந்தந்த மாநிலங்களின் பெயர்களைத் தாங்கியுள்ளன.
இவை அனைத்தும் அந்தந்த மாநில அரசுகளின் தில்லி தல ஆணையர் (Resident Commissioner) அலுவலகங்களாகவும் மாநிலங்களின் தில்லி பிரதிநிதித்துவ அலுவலகங்களாகவும் செயல்படுகின்றன.
இதுவரை தமிழ்நாடு இல்லம் எனத் தமிழிலும் தமிழ்நாடு ஹவுஸ் என ஆங்கிலத்திலும் வழங்கப்பட்ட இந்த அமைப்பின் இரு கட்டிடங்களுக்கு வேண்டுமானால் தனிப்பெயரைத் தரலாமே (கூடுதலாக) ஒழிய தமிழ்நாடு இல்லம் என்கிற அதிகாரபூர்வப் பெயரை மாற்றுவது என்பது மிகவும் அபத்தமானதும் ஆபத்தானதும் ஆகும். அத்துடன் மாநிலங்களின் – குறிப்பாக தமிழகத்தின் உரிமைகள் – பறிக்கப்படுகிற இந்த நேரத்தில் இதற்குப் பின்னால் ஏதேனும் சதி இருக்கிறதோ என்கிற ஐயத்தை உருவாக்குவதாகவுமே இது இருக்கிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு இடி நம்மீது இறங்கிவருகிறது. துரோக கூடாரமாக இருக்கும் பழனிச்சாமி அரசாங்கத்துக்கு எதிராக தமிழர்கள் அணிதிரள்வது காலத்தின் கட்டாயமாக ஆகியுள்ளது.
தமிழ்நாட்டின் நலன்களுக்குத் தொடர்ந்து துரோகமிழைத்துவரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு உடனே தன் அரசாணையை விலக்கிக்கொண்டு தமிழ்நாடு இல்லத்தை தொடர்ந்து தமிழ்நாடு இல்லமாகவே அழைக்க வழிவகைச் செய்யவேண்டும்.
தமிழர்களுடைய வலியுறுத்தலும் அழுத்தமும் இன்றி இது நடக்காது என்பதால், தமிழக மக்களும் அவர்களுடைய நலன்களைப் பிரதிநிதித்துவம்செய்யும் கட்சிகள், அமைப்புகள், சான்றோர்களும் உடனடியாக களத்தில் இறங்கி இந்த மாற்றத்தைச் சாத்தியப்படுத்தவேண்டும் என்று தன்னாட்சித் தமிழகம் கேட்டுக்கொள்கிறது.
ஆழி செந்தில்நாதன்
தன்னாட்சித் தமிழகம்


