வேலைக்காரன் மரியாதைக்குரிய சினிமாவாக ஜொலிக்கிறது

தப்பான வேலை செய்யும் இளைஞர்களையும், வேலையைத் தப்பாக செய்யும் தொழிலாளர்களையும் மடைமாற்றம் செய்யும் இளைஞனின் கதையே ‘வேலைக்காரன்’.

சென்னையில் கொலைகாரக் குப்பம் எனும் குடிசைப் பகுதியில் வசிக்கிறார் அறிவு (சிவகார்த்திகேயன்). அந்த ஏரியாவில் பெரிய ரவுடியாக வலம் வரும் காசியின் (பிரகாஷ்ராஜ்) அனுமதி பெற்று ஒரு சமூக வானொலியைத் தொடங்குகிறார். அதன் மூலம் அடியாள் வேலை செய்யும் தன் குடிசைப் பகுதி இளைஞர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதற்கு அறிவின் அம்மா பொன்னி (ரோகிணி), அப்பா முருகேசன் (சார்லி), நண்பர்கள் ஒத்துழைப்பு தருகிறார்கள். இந்த விவகாரம் காசிக்குத் தெரிய வர கடுங்கோபத்தில் சமூக வானொலியை மூடச் சொல்கிறார். காசி தன் பிறந்த நாளுக்கு காஞ்சிபுரம் செல்ல அன்று சமூக வானொலி மூலம் சில முக்கிய உண்மைகளை ஏரியா மக்களுக்கு எடுத்துச் சொல்லி உண்மையை உணர்த்துகிறார் அறிவு. இதனிடையே மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனியில் விற்பனைப் பிரிவில் பணிபுரிய வேலைக்குத் தேர்வாகிறார். ஒருகட்டத்தில் காசியால் அறிவின் நண்பன் பாக்கியம் (விஜய் வசந்த்) பாதிக்கப்பட, நேரடியாக காசியிடம் மோதுகிறார் அறிவு. இதனால் உலகத்தின் பெரிய முட்டாள் நீதான் என்று காசி அறிவை இடித்துரைக்கிறார். உண்மையில் காசி ஏன் அப்படிச் சொன்னார், அறிவு ஏன் முட்டாள் ஆக்கப்பட்டார், அவரின் வேலை என்ன, அதுசார்ந்த அரசியல் என்ன என்பதையும் அதற்கான விளைவுகளையும் சொல்கிறது ‘வேலைக்காரன்’.

‘தனி ஒருவன்’ மூலம் தடம் பதித்த மோகன் ராஜா ‘வேலைக்காரன்’ மூலம் உணவுப் பாக்கெட்டுகளில் உருவாகும் உடல் நலக் கேடு, அதற்கான சந்தைப்படுத்துலில் உள்ள விபரீதங்கள் குறித்து அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அவரின் தொடர் அக்கறைக்கு வாழ்த்து கூறி வரவேற்கலாம்.

நகைச்சுவைதான் தன் பலம் என நினைத்து எதற்கும் கவலைப்படாத இளைஞனாகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்ட சிவகார்த்திகேயன் ‘வேலைக்காரன்’ மூலம் தன் பாதையை மிகச் சரியாக தீர்மானித்திருக்கிறார். அவரின் அடுத்த கட்டப் பயணத்துக்கான தேடலாகவோ அல்லது ஆரம்பமாக இந்தப் படம் உள்ளது. அந்த பொறுப்பை உணர்ந்து கதாபாத்திரத்தின் கனம் உணர்ந்து நடித்திருக்கிறார். குழந்தைகளுக்கு தப்பான பொருள் போய் சேர்ந்துவிடக் கூடாது என்கிற தவிப்பிலும், பொருளின் ஆபத்து உணர்ந்து காட்டும் பதற்றத்திலும், உண்மையாய் உழைப்பது குறித்த அக்கறையையும், இழப்பின் வலி குறித்த உணர்வையும் இயல்பாக நமக்குள் கடத்துகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படங்களில் இது மிகச் சிறப்பான படம் என்றே சொல்லலாம். நண்பனின் மறைவில் கோபமும் வலியுமாக சாவு டான்ஸ் ஆடுவது, நல்லது போய்ச் சேர வேண்டும் என தொழிலாளர்களின் மனசாட்சியை உலுக்குவது என தன்னை நிரூபித்திருக்கிறார்.

நயன்தாரா இல்லாமல் கதை நகராது என்ற அளவில் அவரது பாத்திரம் கச்சிதமாகவும், அளவாகவும் வார்க்கப்பட்டிருக்கிறது. அதற்கான நியாயத்தை செய்திருக்கிறார் நயன்.

சின்னச் சின்ன அசைவுகளிலும் நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தி அசாதாரணமாக ஸ்கோர் செய்கிறார் ஃபகத் பாசில். ஆவேசம், வெறுப்பு, எரிச்சல் என எல்லா உணர்வுகளையும் துல்லியமாகக் கையாளுகிறார். ஃபகத் பாசிலுக்கான வாய்ப்பு வாசல்கள் தமிழ் சினிமாவில் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

தனக்கு நேர்ந்த அவலத்தை யதார்த்தமாக தன் மகனிடம் சொல்லி, சோர்வான சமயத்தில் ஆலோசனை கொடுத்து ஊக்கம் தரும் காட்சியில் ரோகிணி மனதில் நிறைகிறார். சார்லியின் யதார்த்தமான நடிப்பும் கவனிக்க வைக்கிறது.

பிரகாஷ்ராஜுக்கு முக்கியமான கதாபாத்திரம். ஒரு ட்விஸ்ட் மூலம் தனக்கான தேவையை நிறைவு செய்கிறார். சரத் லோகிதஸ்வா, சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமய்யா, ரோபோ ஷங்கர், சதீஷ், சினேகா, காளி வெங்கட், முனீஷ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், அருள்தாஸ், ஒய்.ஜி.மகேந்திரன், வினோதினி, மைம் கோபி, மதுசூதன ராவ் என படம் முழுக்க மிகப் பெரிய நட்சித்திரப் படை நடித்திருக்கிறது. ஆனாலும் யாரும் வீம்புக்காக வந்து போகாமல், அளவாக அழகாக பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ராம்ஜியின் ஒளிப்பதிவும், அனிருத்தின் இசையும் படத்துக்கு பெரும் பலம் சேர்க்கின்றன. கருத்தவன்லாம் கலீஜாம், இறைவா, வா வேலைக்கார பாடல்கள் ரசிக்க வைக்கும் ரகம். முத்துராஜின் கலை இயக்கம் குடிசைப் பகுதியையும், கார்ப்பரேட் உலகத்தையும் அசலாகக் காட்டுகிறது. ரூபனின் எடிட்டிங் நேர்த்தியாக உள்ளது.

”பொருளை விக்கிறோம்னு சொல்லி இவ்வளவு நாளா பொய்யைத்தானே வித்துக்கிட்டு இருக்கோம்”, ”உலகின் தலைசிறந்த சொல் செயல்”, ”சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நாம மாறுனதெல்லாம் போதும், இப்போ நமக்கேத்த மாதிரி சூழ்நிலையை மாத்துவோம்” உள்ளிட்ட பல வசனங்கள் படத்துக்கு வலு சேர்க்கின்றன.

ஒரு பொருளின் தேவையை எப்படி உருவாக்குவது, சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பொருளை எங்கு வைப்பது, எப்படி சந்தைப்படுத்துவது, விற்பனைக்காக வழிமுறைகளில் எப்படி வித்தியாசமான முறைகளை மேற்கொள்வது என விளம்பரப் பிரிவின் நுணுக்கங்களை விரிவாகவும், நுணுக்கமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா. எட்டு மணிநேரம் வேலை செய்யும் தொழிலாளர் 16 மணி நேரம் நுகர்வோராக இருப்பதையும், அப்போது எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் பளிச்சென சொல்கிறார். 24 மணிநேரமும் முதலாளியாகவே இருக்கும் முதலாளித்துவ சிந்தனையின் ஆபத்தையும் அம்பலப்படுத்துகிறார்.

கதாபாத்திரத் தேர்வு, திரைக்கதைப் போக்கு, தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு என எதிலும் சமரசம் செய்து கொள்ளாத இயக்குநரின் திறமையும், உழைப்பும் படம் முழுக்கப் பிரதிபலிக்கிறது. சிவகார்த்திகேயன் கண்டறியும் அந்த ட்விஸ்ட் செம்ம.

தப்பு எங்கு நடக்கிறது என்று தெரிந்த பிறகும், அதைச் சொல்ல வாய்ப்பு கிடைத்தும் சிவகார்த்திகேயன் ஏன் சொல்லவில்லை, சாதாரண வேலைக்காரனால் அவ்வளவு பெரிய சாகசத்தை நிகழ்த்த முடியுமா என்ற சிற்சில கேள்விகள் எழுகின்றன. ஆனாலும், மார்க்கெட்டிங் உத்திப்படி எமோஷனலையே மையமாக வைத்தால் இந்தக் கேள்விகளும் காணாமல் போகின்றன. மொத்தத்தில் வேலைக்காரன் மரியாதைக்குரிய சினிமாவாக ஜொலிக்கிறது.

நன்றி – தமிழ் இந்து

Leave a Response