தொடர் வெற்றிகளை குவித்துவரும் நாயகன் விஜய் ஆண்டனியின் அடுத்த ரிலீஸ் ‘அண்ணாதுரை’.. புதியவரான ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் டயானா சாம்பிகா, மஹிமா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். வரும் நவ-3௦ஆம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்தவிழாவில் திரையுலக பிரபலங்கள் திரளாக கலந்துகொண்டனர்
வந்திருந்த அனைவரையும் தம்பதி சகிதமாக வரவேற்ற சரத்குமார்-ராதிகா இருவரும் தமிழின் முதல் நாவலான, வேதநாயகம் பிள்ளை எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ புத்தகத்தை பரிசளித்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய விஜய் ஆண்டனி, “சரத்குமார் சார் தனக்கு வந்த கதையை எனக்கு பெருந்தன்மையுடன் திருப்பிவிட்டுள்ளார்.. அதற்கு அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.. இந்த அண்ணாதுரை கேரக்டர்.. இந்தப்படத்தை வாங்கி வெளியிடும் அலெக்சாண்டருக்கு வியாபார ரீதியாக நிச்சயம் நல்ல வரவேற்பை பெற்றுத்தரும்” என கூறினார் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனி நிறுவத்துடன் ராதிகா சரத்குமார் இந்தப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். இதில் படத்தொகுப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி.
‘அண்ணாதுரை’ படத்திலும் ஒரு சுவாரஸ்யமான விளம்பர யுக்தியை விஜய் ஆண்டனி கையாண்டுள்ளார்.. இப்படத்தின் பாடல்கள் வெளியான நிமிடமே விஜய் ஆண்டனியின் வலைத்தளமான ‘www.vijayantony.com‘ மில் இப்பட பாடல்களை மக்கள் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ள முடியும். ஒரே கிளிக்கில் ஒரிஜினல் தரத்தோடு டவுன்லோட் செய்து கொண்டு ரசிகர்கள் இப்பாடல்களை ரசிக்கலாம்.