பெப்சி பன்னாட்டு மென்பானத்துக்கு யாழ் குடாநாட்டில் தண்ணீர்!
ஐங்கரநேசன் மறித்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு
கொழும்பு வணிக மாபியாக்கள் மும்முரம்
சுற்றுச்சூழல் அமைச்சராக பொ.ஐங்கரநேசன் பதவி வகித்த காலத்தில் அவரை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட வெளிநாட்டில் வாழும் தமிழ்த் தொழில் அதிபர் ஒருவர் வந்து சந்தித்துள்ளார். மாடுகளை இலவசமாக தருகிறோம் என்று இனிப்பாகப் பேசிய அந்தத் தொழிலதிபர் கடைசியில் ஐங்கரநேசனிடம் கேட்ட உதவியோடு, ஐங்கரநேசன் மாடுகளும் வேண்டாம் உதவியும் செய்ய இயலாது என்று கறாராகச் சொல்லிவிட்டார். பலர் தூது வந்தும் அமைச்சரிடம் அவர் கேட்ட விடயம் பலிக்கவில்லை.
அவர் அமைச்சரிடம் கேட்;ட விடயம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. யாழ் குடாநாட்டில் மருதங்கேணியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஒன்றைத் தான் முன்னெடுத்து நடத்துவதற்காக ஒத்துழைப்புக் கேட்டே தொழிலதிபர் முன்வந்துள்ளார்.
இதற்கு ஐங்கரநேசன், ஏற்கனவே மத்திய அரசின் நீர் வழங்கல் வடிகால் சபை மருதங்கேணியில் இவ்வாறான ஒரு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அதன் சாதகங்களைப் புரிந்து கொள்ளாத சிலர் அந்தப் பகுதி மக்களைத் தவறாக வழிநடத்தி அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வைத்துள்ளனர். அந்தத் திட்டத்தை உங்களின் முயற்சி குழப்பிவிடக் கூடாது. அதுமட்டுமல்லாமல், நீர் வழங்கல் வடிகால் சபை மானிய விலையிலேயே மக்களுக்கு நீரை வழங்கி வருகிறது. தனியார் நிறுவனம் நீர் வழங்கலை மேற்கொள்ளும்போது மானிய விலையில் வழங்க முடியாது. அந்நிறுவனமே விலையைத் தீர்மானிக்கும். எனவே, தண்ணீரை விநியோகிக்கும் உரிமை எப்போதுமே அரசாங்கத்திடமே இருக்க வேண்டும் என்பதால் கொள்கை ரீதியாக தன்னால் ஒத்துழைப்பு வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தொழிலதிபர் மென்பான நிறுவனத்தையும் மருதங்கேணியில் அமைப்பது தொடர்பாகப் பேசி நூற்றுக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று ஆசை காட்டியுள்ளார். தனது அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்கள், நிகழ்ச்சிகளில் மென்பானத்துக்குத் தடை விதித்துப், பழச்சாறும் பாலும் விநியோகித்த அமைச்சரல்லவர் மென்பானம் என்ற வார்த்தையைக் கேட்டதுமே இன்னும் கறாராக மறுத்துவிட்டிருக்கிறார்.
இப்போது ஐங்கரநேசன் பதவியில் இல்லாத நிலையில் கொழும்பு உயர்மட்ட அரசியல் தலைவர்களின் ஆசியோடு, மருதங்கேணியில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகள் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு மென்பான நிறுவனங்கள் அதிகளவு நீரைப் பயன்படுத்துவதாலும், நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதாலும் அது அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் எதிர்ப்புக் கிளம்பி அகற்றுமாறு கோரிப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இத்திட்டம் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டிருப்பது பலத்த அதிர்ச்சியை எல்லோருக்கும் ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி கிழக்கில் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதுடன் அங்கிருந்து மென்பானத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடனேயுமே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான காணி அடையாளப்படுத்தப்பட்டும் உள்ளது. பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஐங்கரநேசனை அமைச்சுப் பதவியில் இருந்து இறங்க வைத்ததன் பின்னணியில் அவர் முதலமைச்சருக்கு ஆதரவாக இருந்தது மட்டும்தான் காரணமாக இல்லை. எந்தவித விட்டுக் கொடுப்புகளும் இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு பொருத்தம் இல்லாத திட்டங்களை நிராகரித்தது கொழும்பு அரசியலில் உள்ள வர்த்தக முதலைகளுக்கு பெரும் தலையிடியாக இருந்ததும் அவர் இலக்கு வைக்கப்பட்டமைக்கான ஒரு காரணமாக இருந்தது என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.