அஜீத் அறிக்கை பற்றி சமூக ஆர்வலர்கள் கருத்து இதுதான்


நடிகர் அஜித்குமார் சார்பில் அவரது வழக்குரைஞர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அஜித் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை, தேர்தலின்போது தனது சுயசிந்தனையின்படி ஜனநாயகமுறைப்படி வாக்களிக்கிறார், தனது நம்பிக்கையையும் சிந்தனையையும் தனது ரசிகர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் திணிப்பதில்லை, சமூக வலைத்தளங்களில் அவரது பெயரில் வெளியிடப்படும் அரசியல் கருத்துகள் அவருடையவை அல்ல, அவ்வாறு செய்கிறவர்கள் அவர் சார்ந்துள்ள திரைத்துறையையும் பத்திரிகையாளர்களையும் விமர்சகர்களையும் பொதுமக்களையும் தகாத முறையில் பேசி கீழ்த்தரமாகத் தாக்குவது அவருக்கு மன உளைச்சலைத் தருகிறது என்று கூறப்பட்டுள்ளது. அஜித்குமாரின் இந்த அறிக்கை குறித்து எங்களது கருத்தைக் கேட்டார் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ நிகழ்ச்சி நெறியாளர் தம்பி தமிழரசு (ஆகஸ்ட் 20). உடன் பதிப்பாளர் பத்ரி பங்கேற்ற இந்த நிகழ்வில் நான் பகிர்ந்துகொண்ட சிந்தனைகளின் சாரம் இது:

அரசியல், சமூகம் குறித்துத் தனக்குள்ள கருத்தை வெளியிடுவதோ, தனக்குள் மட்டும் வைத்துக்கொள்வதோ குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை. மக்களுக்குத் தங்களது அன்பைப் பெற்ற ஒருவர் – அவர் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களானாலும் – குறிப்பிட்ட ஒரு அரசியல் அல்லது சமூகப் பிரச்சனை என்று வருகிறபோது என்ன கருத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிகிற ஆவல் இருப்பது இயல்பு. தமிழகத்தில் பொதுவாகத் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் மக்களின் அன்பை எளிதில் பெறுகிறார்கள். ஆனால் அவர்களில் பலர் தங்களது தொழில் அல்லது சந்தை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில்தான் அக்கறையோடு இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் எந்தக் கருத்தையும் கூறுவதில்லை. அஜித்குமார் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் அரசியல் எதிர்பார்ப்புடன் செயல்படக்கூடும் என்பதால் தனது ரசிகர் மன்றங்களையே கலைத்தவர்.

அரசியல் என்றாலே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பதாகத்தான் நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். சமுதாயத்தில் நம்மைச் சுற்றி நடக்கிற எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. கட்சி அரசியல் மட்டுமல்லாமல் சாதிப் பிரச்சனை, மத மோதல் உள்பட பல பிரச்சனைகளில் அக்கறை காட்டுவதும் அரசியல்தான். இயல்பாகவே, அனைத்துத் தரப்புகளையும், அனைத்துச் சாதிகளையும், மதங்களையும் சேர்ந்தவர்கள் அஜித் போன்றோருக்கு ரசிகர்களாகியிருக்கிறார்கள். அந்த நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காகவாவது கலைஞர்கள் கருத்துச் சொல்ல வேண்டும் அல்லவா?

ஜனநாயகம், நல்லிணக்கம், பகுத்தறிவு உள்பட தமிழகத்தின் இன்றைய அரசியல், சமூக வளர்ச்சி சினிமாவால் மட்டும் ஏற்பட்டதல்ல. ஆனால் சினிமா இல்லாமலும் ஏற்பட்டுவிடவில்லை. அதே போல், அந்த வளர்ச்சி இந்த அளவோடு தேங்கிப்போயிருக்கிறது, ஆரோக்கியமற்ற சூழல் உருவாகியிருக்கிறது என்றால் அதிலும் திரைத்துறைக்குப் பங்கிருக்கிறது. பல பிரச்சனைகளில் நட்சத்திர நிலையில் உள்ளவர்கள் மௌனமாக இருப்பதும் சேர்ந்துதான் தற்போதைய நிலைமைக்குக் காரணம்.

ஒரு குற்றம் நடக்கிறபோது அதை விமர்சிக்கத் தவறுவது அந்தக் குற்றத்தை அனுமதிக்கிற செயல்தான்.

சமூகவலைத்தளங்களில் வன்மம் வெளிப்படுத்தப்படுவதாக அஜித் கூறியிருப்பது உண்மைதான். முன்பு பள்ளிகளிலும் பொது இடங்களிலும் கழிப்பறைச் சுவர்களில் யாரைப் பற்றியாவது வக்கிரமான முறையில் எழுதிப் படமும் வரைந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று சமூகவலைத்தளங்களில் நடப்பதைப் பார்க்கிறேன்.

சமூகவலைத்தளங்கள் ஒரு சுதந்திரத்தைக் கொடுத்திருப்பது உண்மை. அவை வருவதற்கு முன், ஒரு பத்திரிகைக்கோ, வேறு ஊடகங்களுக்கோ கட்டுரை, கதை, கவிதை என எழுதி அனுப்பினால் அவை வெளியிடப்படுமா, அப்படியே வெளியிடப்பட்டாலும் வெட்டப்படாமல் வருமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. சமூக வலைத்தளங்கள், நாம் சிந்திப்பதை வெளியிடவும், அதைப் பலரும் படிப்பதற்குமான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றன. அதை நல்ல நோக்கத்துடன பயன்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள், வன்மத்தை வெளிப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

குறிப்பாக சாதிய நிலைமைகள் பற்றியோ, மதவெறிச் சூழல் பற்றியோ விமர்சித்தால், சரசரவென்று வருகிறார்கள், நாகரிகமற்ற சொற்களால் தாக்குகிறார்கள். நானே அதைச் சந்தித்திருக்கிறேன். அதிலும் கருத்துக் கூறுகிறவர் பெண்ணாக இருந்துவிட்டால் மிக இழிவான முறையில் தாக்கப்படுகிறார்கள். ஒரு பெண் இதைப் பற்றியெல்லாம் பேசுவதா என்ற ஆணாதிக்க வன்மத்தோடும் அந்தத் தாக்குதல்கள் நடக்கின்றன. அண்மையில் கூட பத்திரிகையாளர்கள் கவிதா முரளிதரன், தான்யா, இதற்கு முன்பு கவின் மலர், சுகிதா… இப்படிப் பலரும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். முறைப்படி புகார் செய்யப்பட்ட தகவல்கள்தான் வந்திருக்கின்றனவேயன்றி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட தகவல் வந்ததில்லை. இது இப்படிப்பட்ட செயல்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது.

கருத்துச் சுதந்திரம் முக்கியமானது, அதுதான் ஜனநாயகத்தின் அடிவாரம். ஒரு கருத்தின் மீதான விமர்சனமும் கருத்துச் சுதந்திரம்தான். அதுவும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அந்தக் கருத்தை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது முக்கியம். ஒருவரது கருத்தை மறுத்து எதிர்க்கருத்து வெளியிடலாம். ஆனால் அவரது சமூகப் பின்னணி, உணவுப் பழக்கம், தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டுத் தாக்குவது கருத்துச் சுதந்திரமல்ல, வக்கிரம்தான்.

ட்விட்டர் பயன்படுத்தவது நடிகர் கமல் மட்டுமல்ல. பிரதமர் மோடி ட்விட்டரில் செய்தி அனுப்புகிறார். முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரி ட்விட்டரில் விமர்சனங்களை வெளியிடுகிறார். ட்விட்டர் போன்ற செயல்பாடுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதே வேளையில் ட்விட்டரோடு நின்றுவிட்டால் மக்களிடையே பரவிவிடாது. தொலைக்காட்டசிகள் அதைச் செய்தியாக்குவதாலும், பத்திரிகைகள் அதை விவாதப்பொருளாக்கிக் கட்டுரைகைள் வெளியிடுவதாலும்தான் பரவுகின்றன.

அரசியல் கட்சிகள் சமூகவலைத்தளங்களில் செயல்படும் தங்கள் தொண்டர்களுக்கு, மற்ற கட்சிகளின் அரசியல் நிலைபாடுகளை விமர்சிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும், அதைத் தரமாகவும் நாகரிகமாகவும் செய்வதற்குப் பயிற்சியளிக்க வேண்டும். கட்சிகள் மட்டுமல்ல, ஊடகங்கள், பொது அமைப்புகள் எல்லாவற்றுக்குமே இந்தப் பொறுப்பு உண்டு.

-குமரேசன்

Leave a Response