கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், உழவர்காவலர் திரு என்.எஸ்.பழனிச்சாமி அவர்களின் 75 வது பிறந்த நாள் விழாவும் சுதந்திரப் போராட்ட தியாகி வீரபாண்டி ஆத்தா சுந்தராம்பாள் அவர்களின் 10 வது நினைவு தினமும் கடைபிடிக்கப்பட்டது.
அதையொட்டி, சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 20 கிராமங்களில் காலை முதல் மாலை வரை ஏர்கொடியேற்று விழாவும் ஏர்முனை இளைஞர் அணி துவக்கவிழாவும் சிறப்பாக நடைபெற்றது.
பெருந்திரளான விவசாயிகள் இளைஞர்கள் பங்கேற்போடு மாலையில் செஞ்சேரிமலையில் மாபெரும் கோரிக்கைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கடும் வறட்சியான சூழ்நிலையில் காயும் தென்னை மரங்களைக் காப்பாற்ற பிஏபி கால்வாயில் உடனடியாக உயிர்த்தண்ணீர் விடவேண்டும்.
போலி பயோமருந்து( SATHYAM Bio ) கம்பெனி உரம் பயன்படுத்தியதால் பயிர்கள் காய்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தரவேண்டும்.
வறட்சி நிவாரணம் கிடைக்கப் பெறாதவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
பிஏபி பாசனத்தை மேம்படுத்த ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனடியாகத் தொடங்கவேண்டும்.
திருப்பூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் வெளியூர் மற்றும் வெளிமாநில காய்கறிகளை அதிகம் விற்பனை செய்வதால் உள்ளூர் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அதைத் தடுத்து முறைப்படுத்தவேண்டும்.நீராதாரங்களை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
விவசாய மின்மோட்டார்களுக்கு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
நிகழ்வில் மாநில செயல்தலைவர் என்.எஸ்.பி.வெற்றி (விவேகம் பட ஒளிப்பதிவாள்ர்), மாநிலத் தலைவர் என்.கே.டி.பொன்னுசாமி,மாநிலப் பொருளாளர் டாக்டர் தங்கராஜ், கோவை மாவட்டத் தலைவர் பாபு,பிரச்சாரக்குழுத் தலைவர் புராண்டாபாளையம் மணி,திருப்பூர் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன், தங்கவேல்,வேலுமணி, கோகுல்ரவி,ராசு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.