யாழ்ப்பாணத்திற்கு ஆடிமாதம் ஒரு மகிழ்ச்சியான மாதம்

ஈழத்தமிழரின் பண்பாட்டு பண்டிகையான ஆடிப்பிறப்பு இன்று.

ஆடிப்பிறப்பு என்பது தமிழ் மக்களால் ஆடி மாதம் முதலாம் நாள் கொண்டாடப் பெறும் ஒரு திருநாளாகும். தனித்துவமான கலாசாரங்கள் பல கொண்ட யாழ்ப்பாண மக்களினால் இத் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப் பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது. ஆடிப் பிறப்பு திருநாள் இவ் வருடம் 17.07.2017 ம் திகதி அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.

ஆடி மாதம்.தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கும் மாதமாகவும், அம்மனுக்கு உரிய மாதமாகவும் போற்றப்பெறுகின்றது. அத்துடன் ஆடி மாதத்தில் பூதேவி பூமியில் அம்மனாக அவதரிதரித்தார் என்றும், பார்வதி மேற்கொண்ட தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார் என்றும், புராணங்கள் கூறுகின்றன. அத்துடன்; ஆடி மாதத்தில் சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி அதிகமாக இருப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன.

ஆடி மாதத்தில் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் ஆகியன ஆடிப் பண்டிகைகளாக அமைவதால் ஆடிமாதம் மேலும் சிறப்புப் பெறுகின்றது.

மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும், உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும், எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்த மானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற் கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத் தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

ஆடி முதலாம் நாள் ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்கின்றோம். அத்துடன் விசேட வழிபாடு செய்தலும், உற்றார், உறவினர்களுக்கும், மற்றைய சமூகத்தைச் சேர்ந்தவர்க்கும் இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் இப் பண்டிகையின் முக்கிய நிகழ்வாகும்.

ஆடிமாதத்தின் சிறப்பை அறிந்த பண்டைய தமிழ் மூத்த குடியினர் கொண்டாடியதாக வரலாறுகள் கூறுகின்றன.ஆடிப்பிறப்பினை ஒர் விஷேட தினமாக கொண்டாடும் ஒரு சமுதாயமாக யாழ்ப்பாண மக்கள் தற்பொழுதும் உள்ளனர். பண்டைய காலங்களில் இருந்து இன்றுவரை யாழ்ப்பாண மக்கள் தமது பாரம்பரியங்களையும், சம்பிரதாயங்களையும், இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் கைவிடாது கைக்கொண்டு வருவது அவர்களின் தமிழ் கலாச்சார பண்பாட்டை எடுதியம்புவனவாக அமைகின்றது.

ஆடி மாதம் முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ”ஆடிச் சீர்” செய்து; பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ”ஆடிப் பால்” என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து மாப்பிளையை மட்டும் மாப்பிள்ளையின் வீட்டிற்கு அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி மாதம் முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.

அதற்கு சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றது. ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதானாலும், சித்திரை மாதத்தில் ஆண்குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்றும் (சித்திரையில் புத்திரன் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தால் குடும்பம் நாசம் என) ஒரு ஐதீகம் இருப்பதால் அவ்வாறான வழக்கத்தை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம்.

ஆடி மாதப் பழமொழிகள் பல. “ஆடிப் பட்டம் தேடி விதை’, “ஆடியில் காற்றடித் தால் ஐப்பசியில் மழை வரும்’, “ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்’, “ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி’, “ஆடிக் கூழ் அமிர்தமாகும்.’

ஆடிப்பிறப்பு என்றவுடன் ஞாபகத்திற்க்கு வருவது ஆடிக்கூழும், நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் “ஆடிப்பிறப்பிற்க்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே” என்ற பாடலும் தான்.
ஆடிப்பிறப்பின் சிறப்பினை கூற வந்த ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் முற்காலத்தில் ஆடிப்பிறப்பு எப்படிக் கொண்டாடப் பெற்றது என்பதனையும், ஆடிப்பிறப்பிற்கு முதல் நாள் சிறுவர்கள் கொள்ளும் உற்சாகத்தினையும், சந்தோசத்தையும் தம்மையும் ஒரு சிறுவனாக பாவனை செய்து பாடிய பாடல் பிரபல்யமானது.

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே
குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

எது எப்படியோ உற்று நோக்கினால் யாழ்ப்பாணத்தில் ஆடிமாதம் என்பது ஒரு மகிழ்ச்சியான மாதமாகவே அமைகின்றது.
யாழ்ப்பாணத்தின் மக்கள் விழா எனக்கருதக்கூடிய நல்லூர் கந்தசுவாமி கோவில் பேருட்சவமும், பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய மஹோற்சவமும் ஆடி மாதத்தினை கருவாக வைத்து இடம்பெறுவதால்; யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய மக்களில் அனேகமானோர் ஒன்று கூடும் மாதமாகவும் அமைந்து விடுகின்றது. அதனால் நவீன காலத்திலும்கூட இந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு மகிழ்வான ஒர் மாதமாக அமைகின்றது.

Leave a Response