
தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் கா.பரந்தாமன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக 29.6.2017 அன்று பிற்பகல் காலமானார்.
பழ.நெடுமாறன் வழிகாட்டுதலில் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழ்த் தேசியமும், தமிழீழ விடுதலையும் அவரது இருகண்கள். எந்தவொரு பொதுக்கூட்டத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈகத்தை நினைவு கூறத் தவற மாட்டார். குறிப்பாக கரும்புலி மில்லரின் தாக்குதல் குறித்து உணர்ச்சியோடு எடுத்து கூறும்போது கேட்பவர் கண்களில் ஈரம் கசிந்து விடும்.
2002ஆம் ஆண்டு செயலலிதா ஆட்சியில் பழ.நெடுமாறன், மருத்துவர் தாயப்பன், சுப.வீரபாண்டியன், சாகுல் அமீது, பாவாணன் ஆகியோரோடு பரந்தாமன் அவர்களும் பொடாவில் கைது செய்யப்பட்டார். அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கும் போது, ” ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசியதைத் தமிழக அரசு தவறு என்று கருதினால், அதைத் தொடர்ந்து செய்வேன்” என்று கூறினார். இதற்காகவே கொடிய சட்டமான பொடச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டார்.
525 நாட்களுக்குப் பிறகே பிணை கிடைத்தது. எந்த நெருக்கடியிலும் கொள்கைப் பற்றுறுதியை கைவிடாதவர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் சூன் 27ஆம் நாள் மதுரையில் சித்திரவதைக்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் உரையாற்றியதை கேட்க முடிந்தது. அப்போது, ” புரட்சித்தலைவி செயலலிதா என்று சொல்வதன் மூலம் அந்தச் சொல் உச்சரிக்க முடியாத சொல்லாகி விட்டது. உண்மையாகவே புரட்சியாளர்கள் என்று சொன்னால் அது லெனினையும், மாவோவையும், பிரபாகரனை மட்டுமே குறிக்கும் ” என்று பேசினார்.
தன் வாழ்வின் இறுதிவரை தமிழ்த்தேசிய இலட்சியத்தை உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த “தமிழ்த் தேசியப் போராளி “கா.பரந்தாமன் அவர்களுக்கு வீரவணக்கம்!


