காதல் காலம் – விமர்சனம்

தற்போதைய தமிழ்ப்படங்களில் பெரிய கதாநாயகர்கள் தப்பு செய்வதே சரி என்கிற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்கள். இந்த நேரத்தில் கதாநாயகனே ஆனாலும் தப்பு செய்தால் தண்டனைதான் என்று உறுதிபடச் சொல்லும் படம்தான் காதல்காலம்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையே கதைக்களமாகக் கொண்டு அங்கேயே மொத்தப் படத்தையும் எடுத்திருக்கிறார்கள்.
தொடக்கக்காட்சியிலேயே சுழித்து ஓடும் ஆற்றில் நாயகனும் நண்பர்களும் குளிப்பதில் தொடங்கி அங்குள்ள மலைகள், நீர்நிலைகள், வயல்கள் என அத்தனை இயற்கைக்காட்சிகளையும் படம் முழுக்கக் காட்டியிருப்பதால் கதையை மீறி காட்சிகளை ரசிக்கத் தோன்றுகிறது.
நாயகன் சந்துருவுக்கு முதல்படம். அறிமுக நாயகன் என்று தெரியாவண்ணம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். உண்மையான காதல் வந்த பிறகு உற்சாகத்தில் சில நிமிடங்கள் தனியே ஆடுகிற நடனத்தில் கவர்கிறார்.
நாயகி நித்யாவும், கிராமத்துப் பெண்களை பிரதியெடுத்த மாதிரி கதைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறார்.
நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் அரவிந்த், நாயகனின் அப்பா, தாத்தா உட்பட படத்தில் இடம்பெறும் பாத்திரங்கள் சரியாக அமைந்திருப்பது படத்துக்குப் பலம்.
புது இசையமைப்பாளர் ஜெயானந்தன் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
கொங்கு வட்டார மொழியை மிகைப்படுத்தாமல் சொல்லியிருக்கிறார்கள். கேட்க இனிமையாக இருக்கிறது.
முதல்பாதியில் ஏற்படும் சில தொய்வுகளைக் களைந்திருக்கவேண்டும்.
நாயகன் தப்பானவனாக இருந்து திருந்திய பிறகும் அவருக்குக் கடைசியில் கிடைக்கும் தண்டனை மனதை கனக்கச் செய்கிறது.
இயக்குநர் பாக்கியராஜின் உதவியாளர் என்பதை அங்கங்கே வெளிப்படுத்தியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் சோமசுந்தரா, கொங்கு மக்களின் வாழ்க்கை முறைகளைக் காட்சிப்படுத்தி அதற்குள் தப்பு செய்தால், பணத்தாலோ, அதிகாரத்தாலோ தப்பிக்க முடியாது தண்டனை நிச்சயம் என்பதை ஆணித்தரமாகச் சொல்லியிருப்பதற்காக அவரைப் பாராட்டலாம்.

Leave a Response