பெரம்பலூரில் பேரதிசயம்- தனியார்பள்ளியிலிருந்து விலகி அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்கள்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், கொத்தவாசல் என்ற கிராமத்தில் தான் தனியார் பள்ளிகளுக்கு டா..டா..காட்டினர் இந்த ஊரின் மக்கள்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொத்தவாசல் மாணவர் சேர்க்கை 100℅ ஆக மாறியது.அதற்காக அந்தப் பள்ளியின் ஆசிரியர் சி.இளவழகனின் முயற்சி சிறப்பானது. இந்த ஊருக்கு மஞ்சள் நிற வாகனம் ( தனியார் பள்ளி வாகனம் ) வந்து கொண்டிருந்தது.அந்த வாகனம் வராமல் இருக்க செய்ய வேண்டியது என்ன என்று யோசித்தார்.அனைத்து ஆசிரியர்களிடம் கலந்து பேசினார்.

அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன்
சில திட்டங்களையும், தீர்மானங்களையும் நிறைவேற்ற உறுதி எடுத்தார். இக்கிராம மக்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியை விடுத்து தனியார் பள்ளிக்குச் செல்வதற்கான காரணம் என்ன என்று யோசித்தார். ஆராய்ந்து பார்க்கும்போது தான் அவருக்குச் சில உண்மைகள் புரிந்தது. தனியார் பள்ளியில் இருக்கும் கணினி வழிக்கல்வியும் ,ஆங்கிலமும் தான் அனைவரையும் ஈர்க்கிறது என்று புரிந்துகொண்டார். உடனே அத்தகைய கல்வியை நமது பள்ளியிலேயே ஏன் உருவாக்கக்கூடாது என நினைத்த அவர் அதற்கான வசதிகளை உருவாக்கக் கடுமையாகப் போராடினார்.

தனது சொந்தச் செலவில் ரூ.1,68,000 ஒன்பது கணினிகள் ,Projector போன்றவற்றை வாங்கி கணினிவழிக்கல்வியினை ஏற்படுத்தினார். பல புரவலர்களை நாடி அவர்களின் உதவியால் மேலும் பல கணினிகள் பெற்று மொத்தம் 15 கணினிகளை உருவாக்கி தினமும் குழந்தைகளுக்குப் பயிற்சியளித்தார். காணொளி காட்சி மூலம் வகுப்புகள் ,ஆங்கிலத்தில் பேச்சுப் பயிற்சியும் வழங்கி படிப்படியாக குழந்தைகளை மெருகூட்டினார்.

இதுவரை இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த முறையில் முதல் முறையாக கல்வித்திருவிழாவினை ஏற்படுத்தி குழந்தைகளின் அசத்தலான ஆங்கில அறிவினையும், திறமைகளையும் கிராமத்து மக்களுக்கு எடுத்துக்காட்டினார். குழந்தைகளின் திறமைகளைக் கண்ட பெற்றோர்கள் அந்த மேடையிலே புரவலர்களாக மாறி ரூ.1,59,000 பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்தனர்.கோடை வெயிலினையும் பொருட்படுத்தாமல் அனைத்து ஆசிரியர்களும் மாணவர் சேர்க்கையில் ஈடுபடுபட்டார்கள்.
அதன் விளைவுதான் தனியார் பள்ளிக்கு ஒட்டுமொத்தமாக டா…டா…காட்டினர் ஊர்மக்கள்.

இன்று வரை தனியார் பள்ளியில் படித்த 49 குழந்தைகள் அரசுப்பள்ளியில் சேர்த்துவிட்டனர். மாணவர் சேர்க்கையில் 100% மட்டுமல்லாமல் இப்பள்ளியில் பசுமைத்தோட்டம் அமைத்து அதில் விளைகின்ற காய்கறிகளை மதிய உணவிற்கு பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி பல்வேறு வகையான துறைகளில் சிறந்து விளங்கியவர்களை அழைத்து எழுத்துப்பயிற்சி ,கராத்தே போன்ற சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

ஒரு ஆசிரியரின் சீரிய சிந்தனை ,கடின உழைப்பு சிகரத்தையும் தொட முடியும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக உள்ளது.
வானம் தொட்டு விடும் தூரம்தான்.

-கல்விச்சிறகுகள்

Leave a Response